stat tracker for tumblr
Aug 302010

விமர்சனச் சுதந்திரம் என்பதின் பொருள் என்ன?

பிரிவு : இலக்கியம் --> விமர்சனம்
எப்பொழுது மனிதனுக்குள் விமர்சனம் குறித்து தோன்றி இருக்கக் கூடும்?

ஏதோ அதிருப்தி, வஞ்சம், கோபம், பயம், திகில், வெட்கம், அவமானம் இன்னபிற உணர்வுகளின் ஊடாக விமர்சனங்கள் கொந்தளித்திருக்கலாம். ஆனால், அதுவல்ல இங்கு செய்தி! "விமர்சனச் சுதந்திரம்" குறித்து அடிக்கடி விவாதங்கள் வருகின்றனவே. அந்த விமர்சனச் சுதந்திரத்திற்கு பொருள்தான் என்ன? வாய்களில் இருந்து வார்த்தைகள் தாறுமாறாய் கொட்டினால் "விமர்சனச் சுதந்திரம்" ஆகிவிடுமா?

தர்க்க விசாரணை சாக்ரட்டீஸ் காலத்தில் தொடங்கிய போது அறிவில் தேடுல் இருந்தது. விஞ்ஞானத்துக்கும், மெய்ஞானத்துக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் விமர்சன சுதந்திரத்தை ஆரம்பித்த போது சமூகமேன்பாட்டுக்கான தத்துவ இயல்கள் ஏற்பட்டு விவாதத்தின் மையக் கருத்துக்களாயின. அரசியலில் கருத்தியல் விவாதங்களை முன்வைத்து விமர்சனங்கள் வெளியான போது விமர்சனச் சுதந்திரத்திற்கு அடக்குமுறை திணிக்கப்பட்டது.

"இல்லை... இல்லை... நாங்கள் விவாதிக்கின்றோம், எங்கள் விவாதங்களுக்கு கருத்துச் சுதந்திரம் தேவை" என்று அரசியல் ஆவலர்கள் கண்டனம் தெரிவித்தனர். நாகரிமான முறையில் விமர்சனத்திற்கான சுதந்திரம் இருக்க வேண்டுமென சோஷலிஸ்டுக்களுக்கும், ஜனநாயவாதிகளுக்கும் இடையே சர்ச்சைகள் வந்திருக்கின்றன.

ஆளாளிற்க்கு கருத்துச் சுதந்திரம், விமர்சனச் சுதந்திரம் என்று கிளம்பியதும் அதனால் ஏகப்பட்ட குழப்பங்களும், திசைமாற்றங்களும், அதிகாரத்தின் ஊடுறுவல்களும், திக்குமுக்காடச் செய்தபோது லெனின், "விமர்சனச் சுதந்திரம் என்பது தற்போது மிகவும் ஃபேஷனாகிவிட்ட முழக்கமாய் இருக்கிறது" என்று குறிப்பிடுகிறார்.


மேலும் சற்று விரிவாக லெனின் கருத்தை பார்ப்போம்:

"--- சோஷலிஸத்தில் ஏற்பட்டிருக்கின்ற விமர்சன போக்கு ஒரு புதுவகையான சந்தர்ப்பவாதம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. விமசகர்களின் பகட்டு பட்டு பீதாம்பரங்களையும், படாடோபமான பட்டப் பெயர்களையும் வைத்து மனிதர்களை எடைப்போடாமல் அவர்களின் செய்கைகளை வைத்தும், யதார்த்தத்தில் பரிந்துரைக்கின்றவற்றை வைத்தும் எடை போட்டுப் பார்த்தால் விமர்சனச் சுதந்திரம் என்பதன் பொருள் சமூக - ஜனநாயகவாதத்தில் சந்தர்ப்பவாதப் போக்குக்கு வேண்டிய சுதந்திரம் சமூக - ஜனநாயகவாதத்தைச் சீர்திருத்தத்துக்கு நிற்கும் ஜனநாயகக் கட்சியாக மாறுவதற்கான சுதந்தரம் சோஷலிஸத்தில் முதலாளிவர்க்கக் கருத்துக்களையும், முதலாளிவர்க்கப் போக்குள்ள நபர்களையும் புகுத்துவதற்கான சுதந்திரம் என்பது தெளிவாகும்.

சுதந்திரம் என்பது ஓரு மேன்மையான சொல். எனினும் தொழில்துறைக்குச் சுதந்திரம் என்கிற பெயரால் மிகவும் கொள்ளைக்காரத்தனமான போர்கள் நடத்தப்பட்டுள்ளன. உழைப்புச் சுதந்திரம் என்கிற பெயரால் உழைப்பாளி மக்கள் சூறையாடப்பட்டுள்ளனர். நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் 'விமர்சனச் சுதந்திரம்' என்கிற சொல்லிலும் இதே உள்ளார்த்த பொய் புகுந்திருக்கிறது.


"----- ஓர் செங்குத்தான கடினமான பாதையில் ஒவ்வொரு மனிதனும் அடுத்தவர் கைகோர்த்துக் கொண்டு கட்டுப்பாட்டுள்ள குழுவாக நாம் நடையிட்டுக் கொண்டிருக்கின்றோம். எல்லா பக்கங்களில் இருந்தும் பகைவர்கள் நம்மைச் சூழ்ந்துள்ளனர். அவர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு நடுவில் நாம் முன்னேற வேண்டியுள்ளது. பகைவனை எதிர்த்துப் போராட நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். நமக்கு அருகில் இருக்கும் சதுப்புக்குழியை நோக்கிப் பின்வாங்குவதற்காக இல்லை.

சதுப்புக்குழியில் வசிப்பவர்கள் தொடக்கத்தில் இருந்தே நம் முயற்சியை குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். நாம் தனிக் குழுவாக பிரிந்து போய்விட்டோம் என்று குற்றம் சுமத்துகின்றனர். நாம் சமரசம் செய்து கொள்வதற்கு பதிலாய் போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்துவிட்டோம் கூறுகின்றனர். இக்கூக்குரல் நம்முள் சிலருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி வாருங்கள் மீண்டும் சதுப்புக்குழியிலேயே இறங்கிவிடலாம் என்று கூவுகின்றனர்.

"இல்லை இன்னும் மேலான பாதைக்கு செல்வோம்" என்று நாம் கூறினால், "எங்களுக்கு கருத்துச் சொல்லும் உரிமையை மறுக்கிறீர்களே!" என்று நம்மிடமே சீறுகிறார்கள்.

"சரி, சீமான்களே! எங்களை அழைக்கும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. அது மட்டுமல்ல, நீங்கள் விரும்பும் இடத்திற்கு செல்லவும் உங்களுக்கு உரிமை உண்டு சுதந்திரம் உண்டு. சதுப்புக்குழிக்கே கூட நீங்கள் செல்லலாம். உண்மையில் உங்களுக்கு தகுதியான இடமும் அதுவே என்று நினைக்கின்றோம். அங்கே நீங்கள் செல்லவும் உதவ தயாராய் இருக்கிறோம்.

நீங்கள் எங்கள் கைகளை மட்டும் விட்டுவிடுங்கள். இழுத்து நிறுத்த வேண்டாம். சுதந்திரம் என்னும் மேன்மையான சொல்லையும் கறைப்படுத்த வேண்டாம். ஏனென்றால், நாங்கள் விரும்பும் இடத்திற்கு போக எங்களுக்கும் சுதந்திரம் உண்டு. சதுப்புக்குழியை நோக்கித் திரும்புகிறவர்களை எதிர்த்தும் போராடும் சுதந்திரம் எங்களுக்கு உண்டு---" என்கிறார் லெனின்.

விமர்சனச் சுதந்திரத்திற்கு இதைவிட சிறப்பான உதாரணம் கூறமுடியுமா?

இன்றைக்கும் அரசியலில் "விமர்சனச் சுதந்திரம்" என்பது ஃபேஷன் வார்த்தைகள் தான். பகட்டும், ஆடம்பர விளம்பரமும், படாடோபமான பட்டப் பெயர்களையும் வைத்துக் கொண்டும், விஞ்ஞான கருவிகளின் மூலம் நம் மூளைக்குள் "விமர்சனச் சுதந்திரம்" உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் வாய்களில் அவை கூச்சல்களாக கூத்தாடுகிறது.

* [இவ்வுதாரணம் இஸ்க்ரா இதழ் 4, மே 1901-ல் வெளியான லெனின் கட்டுரையின் தலைப்பு "எங்கிருந்து தொடங்குவது?" என்பதில் இருந்து எடுத்தாளப்பட்டது)

தமிழச்சி
30.08.2010 
 

தொடர்புடைய பதிவுகள்:
ஆர்எஸ்எஸ் பண்பாட்டு அரசியல் பேசுகிறதா?
அறிஞர் அண்ணாவின் 'தீ பரவட்டும்'
சின்மயி - பெண்மையின் அராஜகம்!
ராபர்ட் ஓவனின் சமுதாய சிந்தனைகள்!
இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு?
 
Share With Us: