Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


MAR
05
2010

"ஜாலி ஜாலி"யென நீ இருந்தால்...

வாழ்க்கையை அணுகும்முறையில் மனிதர்களை இரண்டு பிரிவாக வைத்திருக்கின்றனர்.

ஒரு ரகம் அன்றைய நாட்களை மட்டும் ஜாலியாக அனுபவித்தோமா போனோமா என்பது.

இன்னொன்று எதிர்காலத்தையும் நினைத்து கவனமாக செயல்படும் போக்கு.

இவர்களின் அணுகுமுறை பற்றி சொல்கிறார்கள்:

*மனித வாழ்க்கைத் தத்துவத்தில் வேற்றுமை!
*மகிழ்ச்சி என்றால் என்ன என்பதில் வேற்றுமை!
*மனிதனின் கடமை என்ன என்பதில் ஒரு வேற்றுமை!

இப்படி இருவகை மனிதர்களின் அணுகுமுறைக்கும் மேற்குறிப்பிட்ட 3- காரணங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

´அன்றாடங்காச்சி´யின் தத்துவப்பேச்சு கேட்டிருக்கிறீர்களா?

´இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு... இதுல எதுக்கு மத்தவனுக்காக சேர்த்து வச்சிட்டு மட்டையாகனும், நான் சம்பாரித்ததை நானே தின்னு அழிச்சிட்டு போறேன்´ என்பது.

இவர்களை சுற்றி இருக்கும் மனிதர்களும், இவர்களை சார்ந்து இருக்கும் மனிதர்களையும் ´அடுத்த தலைமுறையின் உதவாக்கரை´களாக வைத்திருக்க இவர்கள் முயற்ச்சிக்கிறார்கள் அவர்களை அறியாமலேயே.

மனிதன் என்றால் இலட்சியம் இருக்க வேண்டாமா? சாதிப்பேன் என்னும் உணர்வு இருக்க வேண்டாமா? முன்னேறுவதற்கு சிந்திக்க வேண்டாமா?

´ஏதோ கிடக்கதை வச்சிட்டு கிடந்துட்டு போறேன்´ என்னும் வாழ்வியல் சிந்தனை அவனை அடிமட்ட மனிதனாகவே வைத்திருக்கிறது.

மனிதனின் பரிணாமத்தில் வளர்ச்சி இருக்க வேண்டுமே தவீர நின்ற இடத்திலேயே தேங்கிப் போவதல்ல என்பார்கள்.

உங்களுக்குத் தெரியுமா?

மிருகங்களுக்கு கூட மேற்குறிப்பிட்ட மனித குணாதிசயங்கள் பொருந்துகின்றன. உடல் வலிமையுடைய பெரிய பெரிய மிருகங்கள் எல்லாம் முதல் ரகம்.

சிங்கம், புலி, யானை, கரடி, திமிங்கலம் என பெரிய உருவமும் உடல் வலிமையும் உடைய மிருகங்கள் தங்களுக்கென எதையும் சேர்த்து வைப்பதில்லை. அன்றைக்கன்றைக்கு ஆக வேண்டிய மேட்டரை பார்த்துக் கொள்கின்றன.

எலி, எறும்பு, தேனீ என இன்னொரு கூட்டம் இருக்கிறது. அதிலும் மிகச் சிறிய மிருகம் எறும்பு. சேமிப்பு சிந்தனையோ அபாரம். இவைகளை இரண்டாம் வகைக்குள் சேர்க்கிறார்கள்.

இருப்பிடம், பாதுகாப்பு, உயிர் பிழைப்பு, எதிர்கால நன்மை என பயங்கரமாக பிளான் போட்டு யோசிக்கிறார்கள் பொடி மிருகங்கள்.

எலிகளைப் பற்றி அறிவியல் உலகம் சொல்கிறது:

"எந்தச் சங்கடத்தையும் சமாளித்து உயிர் பிழைத்து வாழ்கின்ற சாமர்த்தியதனத்தில் மனிதர் கூட எலிக்கு ஈடாக மாட்டார்கள்."

அவ்வளவு முன்னெச்சரிக்கை உணர்வு அதனிடம் இருக்கிறதாம்.

இப்பதான் புரிகிறது மனிதர்கள் எதில் எலியிடம் தோற்றுப் போகிறார்கள் என்று. முன்னெச்சரிக்கை உணர்வென்பது இருபத்தி நான்கு மணிநேரமும் மனிதனுக்கு வேலை செய்வதில்லை. பட்ட பிறகே அனுபவத்தின் மூலமாக முன்னெச்சரிக்கையை அதிகப்படுத்துகிறான். அல்லது அப்போதைக்கு அப்போது ஏதோ வேலை செய்கிறது. அதற்குள் எல்லாக் கூத்துக்களும் நடந்துவிடுகிறது.

இந்த பொடி மிருகங்களைப் போல எதிர்காலக் கனவு திட்டமிடுதல், சேமித்தல், அதற்கான முயற்சி எடுத்தல், உழைத்தல் என்பதில் மனிதனுக்கு எதுவும் மிருகங்களைப் போல இனாமாக எதுவும் கிடைத்துவிடுவதில்லையே...

"பொறுக்கி தின்னு வாழ்ந்துட்டு போகுதுங்க அதுங்க...."

"மனிஷன் நாலு காசு சம்பாதிக்க நாய்பாடு படவேண்டிக்கிடக்கிறது. இதுல கதை சொல்றாங்களாமில்ல கதைன்னு யாராவது முணங்கினால்..."

"முயற்சி இல்லாமல் முன்னேற்றமில்லை" என்பார்கள். 

அன்பர்களே! ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் இருக்கும் குணாதிசயங்களை மட்டும் பார்ப்போம். மனிதர்களுக்கு எறும்புகள் போன்ற மிகச் சிறிய உயிர்கள் கூட ஏதோ ஒரு பாடத்தை சொல்லித்தருகிறது என்னும் போது அதையும் முயற்சிக்க வேண்டியது தான்.

தமிழச்சி
17/06/2009