Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


MAR
06
2010

வக்கீல்கள் / வியாபாரிகள் / விபச்சாரிகள்

உலகில் பொருளியல் சமத்துவம்
ஏற்படுகின்றவரை
திருட்டு என்னும் குணமானது
குற்றமாகத்தான் பாவிக்கப்படும்.
உலகிலுள்ள எல்லாச் சொத்தும்
உலகத்திலுள்ள எல்லோருக்கும் சொந்தம்;
ஒவ்வொருவனும் பாடுபட்டுத்தான்
சாப்பிட வேண்டும்,
தேவைக்குமேல் எவனும்
வைத்துக் கொள்ளக் கூடாது
போன்ற கொள்கைகள் ஏற்பட்டு விட்டால்
திருட்டுப் போவதும், திருட்டுப் போனதைப் பற்றிக்
கவலைப்படுவதும் தானாகவே மறைந்துவிடும்.

ஆனால், இப்போதும்
"நான் திருடுவது குற்றமல்ல,
நீ திருடுவது தான் குற்றம்.
நான் பொய் சொல்வது குற்றமல்ல,
நீ சொல்வது தான் குற்றம்!"
"நான் விபசாரம் செய்வது குற்றமல்ல,
நீ செய்வது தான் குற்றம்"
என்பது போன்றதான
பொது ஒழுக்கங்கள் என்பவைகளும்,
பொது கட்டுப்பாடுகள் என்பவைகளும்
ஒரு நாளும் பொது வாழ்வுக்கும்,
சமத்துவத்திற்கும்,
சுதந்திரத்திற்கும் சிறிதும் பயன்படாது.
இன்று உலகத்தில் சிறப்பாக
நமது நாட்டில் இருந்து வரும்
ஒழுக்கம், கட்டுப்பாடு, தர்மம் முதலியவைகள்
எல்லாம் பெரிதும் இயற்கைக்கு எதிராகவும்,
அடிமைத்தனத்திற்கு ஆதரவாகவும்,
தனிப்பட்டவர்கள் சுயநலத்திற்கேற்ற
சூழ்ச்சியாகவும்
செய்யப்பட்டவைகளாகவேயிருக்கின்றன.

கடைசியாக மனிதனின் ஜீவசுபாவம்
என்னவென்றால்
சிந்தனை உணர்ச்சியும்,
இத்திரிய செயலும் ஆசையுமேயாகும்.
உணர்ச்சியின் காரணமாய்
பசி, நித்திரை, புணர்ச்சி
மூன்றும் முக்கியமான இன்றியமையாத
இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.
இத்திரியங்களின் காரணமாய்ப்
பஞ்சேந்திரியங்களும்
அதாவது சரீரம், வாய், கண், மூக்கு, காது
ஆகியவைகளின் செயல்களையும்
முக்கியமான இன்றியமையாத
இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.

ஆகவே பொதுச் உணர்ச்சியும்,
இத்திரிய செயலும்
மனிதனுக்கு ஆசையை உண்டாக்கிக்
கொண்டேயிருக்கின்றது.
ஆசையின் காரணமாய்
எதையும் ஆசைப்படுவதும்
அதுவும் அனேகமாய் அளவுக்கடங்காமல்
மேலும் மேலும் போய்க் கொண்டிருப்பதும்
சுபாவமாகவே இருக்கின்றதைப் பார்கின்றோம்.
ஆகவே, உணர்ச்சியும் இந்திரிய செயலும்,
ஆசையும் மனிதனால் சாமான்யத்தில்
கட்டுப்படுத்தக் கூடியதல்ல.

யாராலாவது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்றால்
அப்படிப்பட்டவரைப் பற்றி
நாம் இங்கு பேச வரவில்லை.
நாம் சொல்லுவதும் அவருக்குச் சம்பந்தப்பட்டதல்ல.
[அவர்கள் பல லட்சத்திற்கு
ஒருவர் இருப்பார்களோ என்னமோ]

அந்தப்படிக்கில்லாத சாதாரண மனித ஜீவனின்
உணர்ச்சியையும், இந்திரிய செயலையும்,
ஆசையையும் கட்டுப்படுத்தும்படியானதாகக்
கொள்கைகளை, ஒழுக்கங்களை, கட்டுப்பாடுகளை
ஏற்படுத்தினால் அது செலாவணியாகுமா?
செலாவணியாவதாயிருந்தாலும் அதற்கு என்ன அவசியம்
என்பன போன்றவைகளைக் கவனிக்க
வேண்டாமாவென்றுதான் கேட்கின்றோம்.

´பொய் சொல்லக் கூடாது´
என்று வாயால் சொல்லி விடுகின்றோம்.
பொய்ச் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று
சொல்லிவிடுகின்றோம்.
ஆனால் தொழிற்முறைமைக்காகப்
பொய்யை அவசியமாக வைத்து
அதனால் பிறருக்குக் கஷ்டத்தையும், நஷ்டத்தையும்
கொடுத்துவரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும்
மனித சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி
ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
அத்தொழிலில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டு
பெருமையைக் கொண்டு அம்மக்களைக்
கவுரவமாகவே மதிக்கின்றோம்.
ஆனால் அதுபோலவே நடக்கும்
மற்றொரு தொழில்காரரை உதாரணமாக
தேவதாசிகள் போன்றோர்களை
இழிவாகக் கருதுகின்றோம்.

பொதுவாக இம்மூன்று பேர்களாலும்
மனித சமூகங்களுக்குக் கெடுதியும்,
நஷ்டமும் இருந்தும்
இருவரை ஏற்றுக் கொண்டு
ஒருவரைத் தள்ளுவதானது
கேவலமும், சூழ்ச்சியும், சுயநலமுமேயல்லாமல்
இதில் நியாயமிருப்பதாகச்
சொல்ல முடியுமாவென்று கேட்கின்றோம்.
எந்தத் தொழிலானாலும் மற்றவர்களுக்குக்
கெடுதியைக் கொடுக்கும் தொழில் எதுவானாலும்
அது இல்லாமலேயே உலகம் நடக்கும்படியாகத்தான்
பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட விஷயத்தில்
மாத்திரம் வேண்டுமானால் இயற்கையை மாற்றி
கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது அவசியமாகலாம்.
அப்படிக்கில்லாமல் ஒருவருக்கு ஒரு விதம்
என்பதாக மாற்றுவது பயன்படாததாகவே முடியும்.

எனவே இப்போது நடைமுறையிலிருக்கும்
விபச்சாரமென்பதும், அதன் தத்துவமும்
நாம் மேலே குறிப்பிட்டது போல்
பெண்களை அடிமைப்படுத்துவதற்காக
பெண்கள் அடிமைகள் என்னும் கருத்தின் மீது
ஏற்படுத்தப்பட்டவைகள் ஆதலாலும்
அது ஆண்களுக்குச் சிறிதும்
சம்பந்தமில்லாமலிருப்பதாலும்
ஒப்புக்கொள்ள முடியாததாய் காணப்படுவதோடு
பெண்கள் சுதந்திரம், பெண்கள் விடுதலை
என்பவைகளுக்காக நடைப்பெறும் காரியங்களில்
விபசாரம் என்னும் காரியம் வந்து
முட்டுக்கட்டை போடுமானால்
அதைத் தைரியமாய் எடுத்தெறிந்துவிட்டு
முன்னோக்கிச் செல்ல வேண்டியது
உண்மையான உழைப்பாளிகளின் கடமையாகும்.


- தோழர் பெரியார்.
 [26.10.1930]