Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


JAN
21
2010

தலையில் சுமக்கும் நரகல்!

"எனக்குத் தொண்டர்கள் வேண்டும்.
மற்றதெல்லாம் தயாராக்கிக் கொள்ளலாம்.
வலிமை மிக்க ஆற்றலும், ஆர்வமும் கொண்ட
நம்பிக்கை வாய்ந்த இளைஞர்கள் தேவை.
முழு அந்தரங்க சுத்தியோடு கூடிய
இளைஞர்கள் தேவை.
ஒரு நூறு பேர் இருந்தால்
இந்த உலகத்தையே புரட்டி வைத்து விடலாம்.  
இளைஞர்களுக்கு இன்று ஒரே கடமைதான்.
அதாவது நாட்டு மக்கள் - திறனை மேம்படுத்துதல்.
அவர்களை விழிப்புறச் செய்யுங்கள்.
ஒன்று திரட்டுங்கள்.
உங்கள் தியாக புத்தியால்
அவர்களை ஊக்குவித்திடுங்கள்.
இந்த சாதனையைச் செய்ய
இந்திய இளைஞர் குலத்தாலேயே முடியும்."      
- [விவேகானந்தர்]

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு விவேகானந்தர் கர்ஜித்த எழுச்சி மிக்க வாக்கியங்கள். இன்றும் உணர்ச்சி வெடித்திடும் வாசகங்களாய் நம்மை ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. விவேகானந்தரைப் போல் இன்னும் எத்தனை ஞானிகள் அறிஞர்கள் நம் நாட்டில் எளிய மக்களுக்காக வீரியத்தை சொற்களில் பாய்ச்சினர். அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் சக்திகளை உரமிட்டனர். ஆனால் சமூகத்தில் இன்னும் எந்த மாற்றமும் இல்லையே ஏன்?

ப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த தேகார்த்தே (Descartes) தத்துவஞானியின் முதல் முதலாக பார்த்த விஞ்ஞான நோக்கு சமயத்தையும், ஆன்மீகத்தையும் ஐரோப்பாவை ஆட்டங்கான வைத்தது 17- ஆம் நூற்றாண்டில்.

"விஞ்ஞான நோக்கு பரவிய நாடுகள் எல்லாம் மக்களின் இழிவுகளை ஆய்வுக்குட்படுத்தின. பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்க வைத்தது விஞ்ஞானம். இன்று மேன்மக்களாக ஐரோப்பியர்கள் முன்னேறியதற்கு விஞ்ஞான அறிவும் காரணமாகிவிட்டது."

ஞானிகளுக்குள் ஞானியான ´வினோபா´ அடிகள் கிராமதானம் வாயிலாக மறுமலர்ச்சிக்குத் ´ஜெய் ஜகத்´ என்று முழங்கினார். என்ன மாறுதல் செய்ய முடிந்தது நம்மால்?  

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமை மனோபாவத்துடனும் பகுத்தறிவு அற்றும் வாழ்ந்து பழக்கப்பட்ட நமக்கு ஐம்பத்து ஐந்து வருட சுதந்திரம் எந்த மாறுதலை கொண்டு வந்துவிட்டது?

தேசத்தலைவர்கள், அரசியல்வாதிகள் நம் பிரச்சனையின் சுற்றுப் பரிமாணங்களை முழுவதுமாக இன்னும் உணரவில்லையா? அல்லது உணர்ந்திருந்தும் ஒன்றும் செய்ய இயலாதபடி இருக்கின்றார்களா?

மக்களின் ஆயிரம் ஆண்டு நம்பிக்கைகளையும், மனிதனை மனிதன் இழிவு படுத்தும் வர்ணாசிரம முறைகளும் அவர்களை இன்னும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றதா?

உலகப் போரில் தரைமட்டமாகிப் போன ஜெர்மனி இன்று முன்னோடி நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது.

அணுகுண்டில் சிதறிப்போன ஜப்பான் எழுச்சி பெற்றுவிட்டது.

மில்லியன் உயிர்களை போரில் இழந்த சோவியத்  யூனியன் உலக வல்லரசுகளில் ஒன்றாக இருக்கின்றது.

நாம் மட்டும் ஏன் பழைய சம்பிரதாயங்களையும், சாதி, மத, உதவாத கலாச்சாரங்களை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்? வேறு எந்த நாட்டிலும் நடக்காத கொடூரம் நம் நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருப்பது ஏன்?

நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களை இழிந்தவர்களாக மட்டந்தட்டப்பட்டு இழிவேலைகளுக்கு அவர்களை ஒதுக்கி வைத்து நம்மை மேன்மையானவர்கள் என்று சொல்லுவதால் நாம் எவ்விதத்தில் உயர்ந்தவர்களாகிவிட முடியும்?

தோட்டியும், மலக்குழியும், வெற்றுக் கைகளினால் மலம் அள்ளும் குறிப்பிட்ட சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட நிர்பந்தமும், நம் அகங்காரமும் நம்மை மனிதத் தன்மையுடையவர்களாக்கி வைத்திருக்கிறதா?

நமக்குள் சமன்வயம் எப்போது ஏற்படும்?

இந்தியர்கள் உள்ளும், புறத்தும் சிந்தனையைச் செலுத்தினால் ஓர் ஒருங்கிணைந்த இதயப்பாங்கை உருவாக்கிக் கொண்டால் Integrated Personality - நம் சமூக மாற்றங்களை இலகுவானதாக செய்துவிடலாம் அல்லவா?

நம் நாட்டில் மதநம்பிக்கை அபரிமிதமாக வளர்ந்து கிடக்கின்றது. வளராமல் குறுகிக் கிடப்பது மதசார்பில்லாத அறிவியல்தான். கோயில்களிலும், மசூதிகளிலும், சர்ச்சிக்களிலும் புராணப்பிரவசனங்கள், கதாகாலட்சேபங்கள், சமயச் சொற்பொழிவுகள், பஜனைகள் நடத்திக் கொண்டிருந்தால் அறிவு எப்படி வளரும்?

நம் மக்களுக்கு மூடநமபிக்கைகளை வெறுக்க வைப்பதும், Induction, Dedution போன்ற தர்க்க வழிகளை கல்விகள் மூலம் கொண்டுவந்தால் இந்திய சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

சக மனிதர்களை இழிவுபடுத்தும் சிந்தனை ஒழிந்து போகலாம்.

அறிவு வளர்ந்த மனிதன் வறுமைச் சூழலில் இருந்தாலும் வீடு வீடாகப் போய் கூடையில் நரகலை வாரித் தலையில் சுமந்துக் கொண்டு போகும் துப்புறவுத் தொழில் செய்ய தன்மானம் இடங்கொடுக்காது.

இந்த துப்புறவு தொழிலாளர்கள் மட்டுமா நரகலை சுமக்கிறார்கள்?

நாமும் அல்லவா நம் சிந்தனைகளில் நரகலை சுமந்துக் கொண்டு திரிகின்றோம்! நாம் சிந்தனைகளை மாறுவது எப்போது…?

தமிழச்சி
25/09/2008


* தொடர்புடைய இணைப்பு:
http://bit.ly/7hHwis




 

 89 

 

 90 

 

 91 

 

 92 

 

 93 

 

 94 

 

 95