Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


JAN
25
2010

இளமையும், முதுமையும், குழப்பங்களும்..!

"இளையர் முதியர் எனும் இருபால் பற்றி
விளையும் அறிவென்ன வேண்டா - இளையனாம்
தன்தாதை காமம் நுகர்தற்குத் தன் காமம்
ஒன்றாது நீத்தான் உளன்." - [வெண்பா]

இத்தமிழ் வெண்பா மிகவும் பழையது. அர்த்தமோ சூப்பர்.

வயதை ஒட்டி அறிவு வரும் என்று சொல்லுவது தவறு. இளைஞனும் அறிவு முதிர்ச்சி பெற்று விளங்கக் கூடும். முதியவனும் மூடனாக இழிந்து போகக் கூடும் என்கிறது.

உண்மைதானே!

இளமையும், முதுமையும் எதற்குள் இருக்கிறது? அது ஏதோ பிரமிக்கத்தக்க சக்தியல்லவே.  

அறவாழ்வும், பொருள் வாழ்வும், இன்ப வாழ்வும் தனித்தனிக் கூறுகள் இல்லை! இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று வாழ்வில் தொடர்புடையது!

வாழ்வென்பது யாரால் ஓட்டமெடுக்கிறது?

சமூகத்தில் வாழ்வியல் என்பது தொடர்ச்சியான இயக்கத்தின் அறிகுறி அல்லவா?

செயல் வீரம் இளைஞர்களிடமே உண்டு. இரத்தம் சுண்டிய முதுமையில் இல்லையே!  

மாறுதலை நோக்கி ஓடிக் கொண்டே இருப்பது இளமை. முதுமையோ அய்யோ வேண்டாம் என்கிறது. முதுமை போன தலைமுறையின் மதிப்பீடுகளையே நினைத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் தன் சந்ததிக்கு பாதுகாப்பானதாக எண்ணுகிறது.

முதுமையில் அனுபவம் அதிகம். அதில் நல்லறிவு [Wisdom] முதிர்ச்சி தூக்கலா இருக்கும். முதுமையே பட்டை தீட்டப்பட்ட வைரம் என்பார்கள். ஆனால் இதைத்தான் வெண்பா டுபாக்கூறு என்கிறதே!

முதுமையின் அதிகாரத்தைக்கண்டு இளைஞர்களுக்கோ சலிப்பு தட்டுகிறது...

இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்பது அவர்களுடைய குற்றச்சாட்டுக்கள்.

இப்படி உலகம் முழுவதிலுமே இளைஞர்களுக்கும், முதியோர்களுக்கும் இடக்கு மடக்கான சில பிரச்சனைகள் உண்டு...

´தலைமுறை இடைவெளி´ என்று மேற்கத்திய முதுமை ஒதுங்கிக் கொண்டு இளைஞர்களுக்கு பச்சை கொடி காட்டிவிட்டது.

கிழக்கத்திய முதுமையோ விடுவோமா நாங்கள் என்று சிண்டு பிடித்த கதைதான்.

நம் சமுகத்தில் வாழ்க்கையின் கட்டுப்பாடுகள் யாரிடத்தில் இருக்கின்றது? குறிப்பாக இளைஞர்களை எடுத்துக் கொள்ளுங்கள். கல்வி, வேலை, திருமணம் உட்பட எதிலும் சுயேச்சையாக இயங்கவிடாமல் பொறுப்புகளை முதியவர்கள் வைத்துக் கொள்கிறார்கள்.

"நான் சொல்வதைக் கேள், உனக்கு ஒன்றும் தெரியாது" முதுமை அனுபவம் என்னும் பேரால் அதட்டிப்பார்க்கிறது.

ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கக்கூடாது.  

"மொளச்சி நாளு இலை விடல... அதுக்குள்ள என்ன பேச்சு பேசுது பாருங்க..."

ஜப்பானிய போன்ஸாய் மரங்களாக இளைஞர்களை வெட்டித் திருத்தி தன் விருப்பத்திற்கேற்றார் போல் செயல்படுத்த முற்படும் முதுமை.

"வயசுக் கோளாறு, தோளுக்கு மேலே வளர்ந்த தெணாவட்டு.."  

இளைமையை பார்த்து முதுமை அங்காலாய்த்துக் கொள்ளும் போது முதுமையின் கையில் இருக்கும் அதிகாரத்தை [´செங்கோல்´ என்றே வைத்துக் கொள்ளுவோம்] இளமை வெறுப்போடு பார்க்கிறது.

"இளமையின் கோணல் சித்திரமே முதுமை. எண்ணம், சொல், செயல்
மூன்றுமே அப்போது சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன" என்று சாமுவேல் பட்லர் சற்று காரமாகவே கண்டிக்கிறார்.

சாமுவேல் எழுதிய ´ஏரெவோன்´ கற்பனை கதையிலும் முதியோர்களை ஓரங்கட்டி வைத்துவிடுகிறார்.  

முதுமையின் கையில் உள்ள அதிகாரம் இளமையை வெறுக்கும்.
அழகைப் பார்த்துப் பொறாமைக்கு ஆளாகும். எழுச்சி மிக்க திட்டங்களைச் சந்தேகக் கண்ணோடு சரித்திட பார்க்கும்!

இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார் சாமுவேல்.

இளைஞர்களோ சாமுவேலுக்கு ´ஓ´ போடுகிறார்கள்.

முதுமையோ என் பேச்சை கேட்காவிட்டால், ´நயா பைசா என் சொத்துல இருந்து கிடைக்காது....´

இப்படியே பேசிப்பேசியே இளமைக்கும், முதுமைக்கும் போராட்டங்கள் தொடர்கிறது புரிதல் இல்லாமல்.

தமிழச்சி
13/07/2009



 

 87 

 

 88 

 

 89 

 

 90 

 

 91 

 

 92 

 

 93