 |
நம் சமூகம் குடும்பம் என்ற கட்டமைப்பிற்குள் போலி முகமூடியை அணிந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய துக்கம், மகிழ்ச்சி, காதல், காமம், கோபம் என எதையும் தன் இயல்புகளில் மனிதர்களை வெளிப்படுத்த விடுவதில்லை. மனிதர்கள் ஒட்டுமொத்தமாக அச்சடிக்கப்பட்ட இயந்திரமனிதனாக இருக்க விரும்புகிறது. மாற்றுக் கருத்துக்களை சமூகம் எளிதில் ஏற்பதில்லை. ஒவ்வொரு குடும்பமும் துக்ககரமானது. துக்ககரமான வாழ்வில் மனிதனிடம் இருக்கும் பரவசத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?
"நீ ஒரு பைத்தியக்கார விடுதியில் வீசியெறியப்பட்டிருக்கிறாய். எல்லோரும் பைத்தியங்கள். நீ என்ன செய்ய முடியும்? உனக்கு பைத்தியமில்லையானால் பைத்தியமாக நடி. அதுதான் அங்கே புத்திசாலித்தனம் என்கிறார்" ஓஷோ.
எளிமையான விளக்கங்களுடன் மேலும் உண்மையை வெட்டவெளிச்சமாக்குகிறார். எளிமையான வாக்கியங்களில் சாட்டையடி....
"நீ தெளிவானவன் என யாராவது அறிந்தால் பிரச்சனை உருவாகிவிடும். பைத்தியக்கார விடுதியில் ஒரு தெளிவான மனிதன் மற்ற பைத்தியங்களைவிட கூடுதல் பைத்தியத்துடன் நடிக்க வேண்டியுள்ளது. அதுதான் அவனுக்குப் பாதுகாப்பானது.
இந்த வாழ்க்கையில் எல்லோரும் பித்தர்கள்.
நீ என்ன செய்ய முடியம்?
இந்த பூகோளமே மிகப்பெரிய பைத்தியக்கார விடுதி. எல்லோரும் துக்கமானவர்கள். நோய் பிடித்தவர்கள் தெளிவற்றவர்கள்.
நீ என்ன செய்ய முடியும்?
அவர்களுடன் நடித்துக் கொண்டிரு. அநாவசியமான பிரச்சனைகளை உருவாக்காதே, வெறுமனே நடி உன் நடிப்பை ரசித்து மகிழ்ந்திரு. பிறருக்காக நடி, ஆனால் உனக்காக பரவசத்துடன் பித்துப்பிடித்திரு! ஒரு பக்கத்து வீட்டுக்காரர் இறந்துவிட்டால் உன்னால் பரவசப்பட முடியாது. உதைப்பார்கள்,
அழு! "அழகாக நடி" அதுதான் அங்கு தேவை"
துக்ககரமான சூழ்நிலையில் மரணம் ஏற்கப்படாத நிலையில் மரணம் ஒரு பேயாகத் தெரியுமிடத்தில் யாருக்கும் எந்தவித தொல்லையும் தராதே. நீ அறிவாளியானால் நடித்துக் கொண்டிரு!
"யாரும் உன்னைப் போல் அழவில்லை என்பது போல் அற்புதமாக நடித்து விடு...."
இந்த நடிப்பைத்தான் நம் சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் செயல்படுத்துகிறான்...
இங்கே பொய்மை முன்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. யதார்த்தங்கள் மனதுக்குள் புலம்பித் தீர்த்துக் கொண்டிருக்கிறது...
நாம் சூழல்களுக்கு ஏற்ற நடிகராக (நடிகையாக) மாறிவிடும் போது தொல்லைகள் ஏதுமில்லை. இது எல்லாமே நடிப்புதான்.
இந்த வாழ்வும் ஒரு மன நாடகம் தான் என்று உணரும் போது கேள்விகளாய் நம்முன் இருப்பவை தனிமனித சுதந்திரமும், நம் இயல்பு நிலைகளும் கடந்த விரக்தி, அதைத் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இது தான் மனித வாழ்வின் உயிரோட்டமா?
தமிழச்சி 03/03/2001
|
 |