Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


JAN
26
2010

சித்தனைத் தேடி பித்தனாகி போவேனோ?

சில நாட்களுக்கு முன்பு மருந்துக்கடைக்குச் சென்றிருந்தேன். நிறைய ஒமியோபதி மருந்துக்களை பார்க்க முடிந்தது. உடல் மெலிவதற்கு கூட ஒமியோபதியில் மருந்துக்கள் வந்துவிட்டன. சமீபத்தில் புளியில் (சமையலுக்கு உபயோகிப்பது) ஏதோ மருத்துவ மகிமை இருப்பதை கண்டுபிடித்து இந்தியாவில் இருந்து வாரிக் கொண்டு வருகிறது ஐரோப்பிய மருத்துவ உலகம். கடந்த 5-வருடங்களாகவே ஐரோப்பாவில் ஒமியோபதி மருத்துவத்திற்கு அமோக ஆதரவு வந்துக் கொண்டிருக்கின்றது. அடுத்தது சீன நாட்டு அக்குபஞ்சருக்கும் கிராக்கி.

எனக்கு தெரிந்த ஒருவர் அலர்ஜிக் உள்ளவர். அடிக்கடி தும்பிக் கொண்டே இருப்பார். கொஞ்சம் தூசி இருந்தால் கூட போதும். ஒரே தும்பல் தான். சிறிய வயதில் இருந்தே அவர் அலர்ஜிக்காக மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அக்குபஞ்சர் மூலம் ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சுத்தமாக தும்பல் வருவது நின்று போய்விட்டதாக சொல்கிறார்.

எனக்கும் நெடுநாட்களாகவே சித்தர்களைப்பற்றியும் அவர்களுடைய மருத்துவ கண்டுப்பிடிப்புகளைப்பற்றியும் தெரிந்துக் கொள்ள விரும்பி தமிழில் புத்தகங்களை தேடிப்பார்த்தேன்.

ம்கூம்.... ஒன்று கூட கிடைக்கவில்லை.

கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆதியில் பகவான் அவதாரமாகிய ´தன்வந்தரி´ மருத்துவ இயலை முதல் முதலாக உருவாக்கியதாக ´ஐதீகம்´ சொல்கிறது.

´தன்வந்தரி´ என்ற பெயரில் பல மருத்துவ இயலைத் தோற்றுவித்தவர்கள் இருப்பதால் வரலாற்று குழப்பம் ஏற்படுகிறது. இருப்பினும் ´காசிராஜ திவோதாச தன்வந்தரி´ (Kasiraja Divodasa Dhenvantari) ஆயுர் வேதத்தை முறைப்படுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரித்திருக்கிறார்.

உட்கொள்ளும் மருந்து, குழந்தை மருத்துவம், மனத்தத்துவ இயல், தொண்டை, காது, மூக்கு மற்றும் கண் சிகிச்சை, அறுவை மருத்துவம், நச்சுப் பொருள், இரசாயண இயல், காயகல்ப இயல் (geriatrics) உடலுறுப்புக்களைத் திருத்தியமைக்கும் அறுவை சிகிச்சை என மருத்துவப்பிரிவுகளைக் கண்டு ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் ஆச்சரியத்துடன் புகழ்கின்றனர்.

சித்த மருத்துவம் தமிழகத்தில் தோன்றிய மருத்துவ சாத்திரம். அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் வகுத்தமுறைகள். பெரும்பாலும் மூலிகைகளை கொண்ட மருத்துவமுறைகள்.  

ஐரோப்பிய மருத்துவ முறைகள் நம்நாட்டில் வழக்கத்திற்கு வந்தபின் சித்த மருத்துவம் சிதிலடைந்துவிட்டது. சமீப காலமாக இந்திய அரசு ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் வட இந்திய ´யூனானி´ மருத்துவம் மறையாமல் இருப்பதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பலகோடி செலவில் கல்லூரிகளும், ஆய்வு நிறுவனங்களும், மூலிகைத் தோட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு சித்த மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பாவில் சித்த மருத்துவத்திற்கு மதிப்பு கூடிக்கொண்டு போவதும் இந்திய அரசு கவனத்தில் எடுத்திருக்கலாம். நம் முன்னோர்களின் அறிவை அதன் உருவாக்கங்கள் நம் மண்ணில் முற்றிலும் இன்னும் மறையவில்லை என்பதற்கு சில உதாரணங்களாக அரசு சித்த மருத்துவங்கள் இருக்கின்றன.

***

கி.மு.8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும் சரகர் (Charaka) இந்திய மருத்துவ உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் "சரகஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார்.
120- அத்தியாயங்கள் கொண்ட சரகஸம்ஹியில் மருத்துவக் கோட்பாடுகள், நோய் பரிசீலனை, உடல் அமைப்பு, உடலுறுப்பு இயக்கம், கருவின் தோற்றம் மற்றும் கருவின் வளர்ச்சி, வியாதி குறித்த சிகிச்சை அணுகுமுறைகள் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனுக்கு வியாதிகள் எப்படி தோன்றுகின்றது என்பதைக் குறித்து அவரின் ஆராய்ச்சியின் முடிவில், "வியாதிகள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் வருகின்றது" என்பதை சாகர் தான் முதல் முதலாக உலகுக்கு சொன்னவர்.

பிரெஞ்ச் விஞ்ஞானி ´லூயி பாஸ்டி´யருக்கு முன்னாலேயே அதாவது 2.500- ஆண்டுகளுக்கு முன்பே சரகருக்கு தெரிந்திருக்கிறது. சரகர் மனிதனின் உடல் இயக்கம் பற்றி சொல்லும் போது மனிதனின் உடல் முழுவதும் இரத்தத்தில் இருப்பதில்லை. மனித உடல் முழுவதும் இருக்கும் இரத்தக்குழாய்களின் வழியாக இரத்தம் சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டேயிருக்கிறது என்றார். 17- ஆம் நூற்றாண்டில் ´வில்லியம் ஹார்வி´ என்னும் ஆங்கிலேய விஞ்ஞானி இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் என்று ஐரோப்பிய விஞ்ஞானம் சொல்கிறது.

சரகருக்கு பிறகு கி.மு.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சுஸ்ருதர் "சுஸ்ருத ஸம்ஹிதை" என்ற நூல் எழுதியிருக்கிறார்.
"சுஸ்ருத ஸம்ஹிதை" இந்திய அரசு பதிப்புத்துறை Scientiste என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் வெளியிட்டிருக்கிறது. சுஸ்ருதர் அறுவை மருத்துவ சிகிச்சையில் நிபுணராக இருந்திருக்கிறார். Scientiste நூலில் ஓரிடத்தில் சுஸ்ருதர் சொல்கிறார்:

"அறுவை மருத்துவனுக்கு தைரியமும், சமயோசித சாமர்த்தியமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அறுவை மருத்துவன் கைகள் வியர்க்கக்கூடாது. கூரிய கத்தி முதலிய மருத்துவ ஆயுதங்களை கை நடுங்காமல் கெட்டியாக பிடித்திருக்க வேண்டும். அவனை நம்பி ஒப்படைத்திருக்கும் உயிரை சொந்த மகளை(னை)ப் போன்று கருதவேண்டும்."

"நெருக்கடி நேரங்களில் அறுவை மருத்துவன் சுபவேளை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. விபத்து அல்லது ஆபத்தான சுழலில் சிக்குண்டு கொண்டுவரப்படும் நோயாளியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற சிந்தனை வரவே கூடாது. எப்படியாவது உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்ற தீவிர செயல் இருக்க வேண்டும்." என்கிறார் சுஸ்தர்.

இன்றைய மருத்துவ உலகம் கடைப்பிடிக்கும் மருத்துவ நெறியை
10-ஆம் நூற்றாண்டிலேயே சுஸ்தர் சொல்லிவிட்டார். இப்படி அரிய கண்டுப்பிடிப்புகளை எடுத்தச் சொன்ன சித்தர்களைப்பற்றி தமிழில் தெரிந்து கொள்ள முடியவில்லை. யாரும் சீண்டிப்பார்க்காத கண்டுபிடிப்புகளாக போய்விட்டது

***

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ´பாஸ்கரர்´ என்ற வான இயல் ஆராய்ச்சியாளர் இருந்ததாகவும், "ஜியோதிஷம்" என்று வான சாஸ்திரத்தை தொகுத்ததாகவும் கேள்விப்பட்டு அதையும் தேடிப்பார்த்தால் நஹி... என்ற பதிலும், கேலியுமாகவே பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கிற எங்களுக்கே அவரை யாரென்று தெரியவில்லை. 7- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று சொல்கிறீர்கள். பேரைப்பார்த்தால் பாஸ்கரர் என்று இந்த காலத்து பேராக இருக்கின்றது. நீங்கள் தப்பாக புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அட்வைஸ் வேறு.

எப்படியாவது இந்த வான இயல் பாஸ்கரனை கண்டுப்பிடித்தே ஆக வேண்டும் என்று தேடிதேடிப் பார்த்தேன். இணையத்தில் கூட அவரைப்பற்றி எந்தக் குறிப்பையும் காணவில்லை. வெறுத்துப் போய் நாளடைவில் அதைப்பற்றி மறந்து போய்விட்ட நிலையில் சென்ற மாதத்தில் பாரதியார் கவிதைகள் தொகுப்பு அடங்கிய கவிதைகளை படித்துக் கொண்டிருந்த போது....

"உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்" -

என்று பாரதியார் ஓர் பாடலில் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கரரின் வான சாஸ்திரத்தை வியர்ந்து போற்றுவதைக் கண்ட பிறகு மீண்டும் பாஸ்கரன் ஆராய்ச்சி தொற்றிக் கொண்டது.

வராகமிகிரரின் "பிருகத்சம்ஹிதை" என்னும் சாஸ்திரம் 4000-சுலோகங்கள் மூலமாக அறிவியல் துறைகள் பற்றிய தகவல்கள் கோட்பாடுகளை தொகுத்திருக்கிறது. வராகமிகிரர் வாழ்ந்த காலகட்டத்தில் சமகாலத்தவரான ஆர்யபடர் (Arya Bhata) "ஆர்யபடீயம்" என்ற சாஸ்திரத்தை உருவாக்கியிருக்கிறார். அவரும் கணிதம், வானஇயல் குறித்து எழுதியிருக்கிறார். பிஹார் மானிலத்தைச் சேர்ந்த ஆர்யபடர் நாலந்தா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவியில் இருந்தவர்.

தென் இந்தியாவில் வராகமிகிரருக்கு பின் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் பாஸ்கரர் செய்யுள் வடிவத்தில் வான இயலை தொகுத்ததாக கூறப்படுகிறது. பாஸ்கரர் தன் மகள் ´லீலாவதி´க்காக கணித நூல் இயற்றியதாகவும் அக்பர்பாதுஷாவின் கட்டளைப்படி பாரசீக மொழியில் அவை மொழிபெயர்க்கப்பட்டதாகவும் பிரான்ஸ் நாட்டில் பழைமை நூல் ஒன்றில் குறிப்பு காணப்படுகின்றது. அந்நூலில் எண் கணிதம் Arithmetic வடிவ கணிதம் Geometry பற்றிய பல குறிப்புகளை பாஸ்கரர் குறிப்பிட்டிருக்கிறார். அல்ஜீப்ரா கணிதம் மற்றும் கிரகம் கோள கணிதம், வான இயல், திரிகோணமிதி (Trigonometry) பற்றிய கோட்பாடுகளையும் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கரர் குறிப்பிட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இன்னும் சித்தர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சித்தனைப்பற்றி படிக்கும் போதும் இன்றைய விஞ்ஞானிகள் நினைவுக்கு வருவதை தவீர்க்க முடியவில்லை.


தமிழச்சி
18/10/2008

 

 

 

 50 

 

 51 

 

 52 

 

 53 

 

 54 

 

 55 

 

 56