 |
"வைக்கத்திலே போராட்டம் ஆரம்பமானதே ஒரு சிறு நிகழ்ச்சியிலேயிருந்துதான்."
தோழர் மாதவன் என்ற பி.ஏ., பி.எல்., படித்த ஒரு வக்கீல் ஒரு வழக்குக்காக ஆஜராகப் போனார். வழக்கு விசாரணைக்காக கோர்ட் இடம் ராஜாவுடைய கொட்டாரத்தில் (அரண்மனையில்) ஒரு இடம் ராஜாவின் பிறந்த நாள் விழாவிற்கு அந்த ராஜாவுடைய கொட்டாரத்தில் (அரண்மனையின்) எல்லாப் பாகத்திலும் பந்தல் போடப்பட்டதில் கோர்ட் நடக்கும் இடமும் பந்தலுக்குள் அங்கே போக வேண்டிய அவசியம் வந்தது. இராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முறை ஜெபம் ஆரம்பமாயிற்று. இந்த வக்கீல் ஈழவ (´நாடார்´) சமுதாயத்தைச் சேர்ந்தவராதலால் அங்கே போகக் கூடாது என்று தடுத்தார்கள்.
அந்த நேரம் நான் தமிழ்நாட்டிலே தீண்டாமை விலக்கு என்பதில் தீவிரமாக இருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம்.
"இந்த மாதவன் (வக்கீல்) சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாயத் தலைவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். வக்கீல் மாதவன், டி.கே.மாதவன், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.பி. கேசமேனன் இவர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்து முடிவு செய்தார்கள்.
"முறை ஜெபத்தன்று ஆரம்பிப்பது என்று முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். நான் அப்போது தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் தலைவராக இருக்கிறேன். எந்த ஊரில் சத்தியாகிரகம் ஆரம்பிக்கலாமென்பதற்கு வைக்கத்தையே தேர்ந்தெடுத்தார்கள்.
ஏனென்றால், அந்த ஊரில் தான் ஊர் நடுவில் கோயிலும், அதன் 4-வாசலுக்கு எதிரிலும் 4-நேர் வீதிகளும், கோயில் மதில்கள் சுற்றிலும் பிரகாரம் தெருக்கள் எல்லாம் இருக்கும்.
அந்த வீதிகளில் கீழ்ச்சாதிக்காரர்களான அவர்ணஸ்தர்களும், அயித்தக்காரர்கள் எனப்படும். தீண்டாதாரும் நான்கு புறத் தெருக்களிலும் கோயில் வாசல்களுக்கு முன்னாலும் நடக்கக்கூடாது! மூன்று ஃபர்லங் தூரத்திலேயும், 4 ஃபர்லங் தூரத்திலேயும் இருக்கிற ரோட்டில்கூட நடக்காமல் ஒரு மைல் தூரம் வேறு ரோட்டில் சுற்றிக் கொண்டுதான் எதிர் ரோட்டுக்குப் போக வேண்டும். அயித்தக்காரர்களான தீண்டப்படாதவர்களைப் போலவே தான் ஈழவர்கள், ஆசாரிகள், வாணியர்கள், நெசவாளிகள் முதலியோரும் அந்த ரோட்டில் நடந்து போகக்கூடாது.
இதே மாதிரிதான் சுசீந்திரத்திலும் உள்ள கோயில் மற்றும் அந்த ராஜ்யத்தில் உள்ள மற்றக் கோயில்கள் பக்கம் அமைந்துள்ள தெருக்களிலும் நடக்க இவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.
வைக்கத்தில் கோயிலுக்குப் பக்கமாக வாசலுக்கு எதிராக அமைந்த தெருக்களில் தான் எல்லா முக்கிய ஆபீசுகளும், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் முதலியனவும் இருந்தன. ஏதாவது போலீஸ்காரர்களையோ, இன்ஸ்பெக்டர்களையோ, குமாஸ்தாக்களையோ மாற்றுவதானாலும்கூட கீழ்ச்சாதியர்களை அங்கு மாற்ற மாட்டார்கள். ஏனென்றால், அந்தப் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுக்கள் இருக்கும் இடத்திற்குப் போக கீழ்ச் சாதியார்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், முக்கியமான கடைகளும் அந்த வீதிகளில்தான். ஆனதால் கீழ்ச்சாதிகள், கூலிகள் அங்குச் செல்ல முடியாது.
சத்தியாக்கிரகம் ஆரம்பமானவுடன் வக்கீல் மாதவன், பாரிஸ்டர் கேசவமேனன், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப் முதலியவர்களைப் போல் சுமார் 19-பேரை ராஜா அரஸ்ட் செய்யும்படி உத்திரவிட்டு அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
தினசரி ஒருவர் வீதம் கைது செய்து அவர்களை மாத்திரம் தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் கைதிகளாக நடத்த உத்தரவிட்டார்கள்.
அதோடு அதுவும் நின்றுவிடும் போலத் தோன்றியது. உடனே எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவ மேனனும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள். நீங்கள் வந்துதான் இதற்கு உயிர் கொடுக்கனும், இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்றாலும் பெரிய காரியம் கெட்டுப்போகுமே என்றுதான் கவலைப்படுகிறோம்.
உடனே நீங்கள் வந்து பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எழுதி அனுப்பினார்கள். எனக்கு ஏன் எழுதினார்கள் என்றால், தீண்டாமையைப் பற்றிப் பேசுவதில் நான் கெட்டிக்காரன், கிளர்ச்சியிலும் நான் கெட்டிக்காரன் என்று எனக்குப் பேர். நான் அப்போது சுற்றுப் பிராயணத்தில் இருந்தேன்.
ஈரோட்டிற்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம் ரீடைரக்ட் செய்யப்பட்டு மதுரை ஜில்லாவில் உள்ள பண்ணைபுரம் என்ற ஒரு மலைப்பக்க கிராமத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவன் என்ற முறையில் நான் பேசிக் கொண்டிருந்த போது என் கைக்குக் கிடைத்தது.
உடனே மீதி சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை எல்லாம் ஒத்திப் போட்டுவிட்டு நேரே ஈரோட்டுக்குப் போனேன். வீட்டுக்கு வந்தவுடன் வைக்கத்திற்குப் போய் சத்தியாக்கிரகத்தை நடத்துவதென்று மிக்க மகிழ்ச்சியோடு மூட்டை கட்டிவிட்டேன்."
.......திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கும் நான் வரும் வரை தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி ஒரு லெட்டர் எழுதிவிட்டு இந்தச் சந்தர்ப்பம் ஒரு நல்ல வாய்ப்பு, இதை விட்டால் இந்த மாதிரி அருமையான வேலை செய்ய வேறு வாய்ப்புக் கிடைக்காது என்று எழுதிவிட்டு 2-பேரைக் கூட்டிக் கொண்டு வைக்கத்திற்கு வந்தேன்.
வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்து கொண்டு போலீஸ் கமிஷனர் பிட், இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் பேஷ்கார் சுப்ரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்) ஒரு தாசில்தாரும், மற்ற எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும் போது வரவேற்றார்கள். (விஸ்வநாத அய்யர் என்பது அந்தத் தாசில்தாருடைய பெயர். அதிலே சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் அய்யர், அய்யங்கார்கள்தாம். இதில் ´பிட்´ என்பவர் தாம் வெள்ளைக்காரர்) "மகாராஜா அவர்கள் எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித்தரச் சொன்னார்" என்று சொல்லி வரவேற்றார்கள்.
இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும், ஏன் மகாராஜா அப்படிச் செய்தார் என்றால் அதற்கு 3-மாதத்திற்கு முன்பு இந்த ராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து ஒரு நாள் ஈரோட்டிலே தங்கி விட்டு அடுத்த நாள் டெல்லிக்கு இரயில் ஏறிச் சென்றார். இப்படி பலமுறை இது வழக்கம்.
அப்படி ஈரோட்டில் தங்கும்போது அதற்கு வேண்டிய வசதிகள் மகாராஜாவின் சிப்பந்திகள் தங்கும் இடம் எங்கள் சத்திரத்திலும், மகாராஜா எங்கள் பங்களாவிலும் தான் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி 3-மாதத்திற்கு முன் வந்த போது அவருடன் இந்த போலீஸ் அதிகாரி இன்னும் ராஜாவின் உதவிக்குத் தேவையான எல்லா அதிகாரிகளும் வந்து போனதில், இவர்கள் ஈரோட்டில் என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறவர்களாகவும், நானும் அவர்களை எங்கள் வீட்டிற்கு வந்தபோது சந்தித்துப் பேசியவனாகவும் இருந்திருக்கிறோம். இதனால் மகாராஜா சற்று மரியாதைக் காட்டினார்.
சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்து நடத்த வந்த என்னை மகாராஜா சார்பில் இந்தப் பெரிய அதிகாரிகளே வரவேற்கிறார்கள் என்று கண்டதும் அப்பக்கத்திய பாமர மக்களுக்கு ஒரே குஷாலாக ஆகிவிட்டது.
என்னை விருந்தினராக மகாராஜா கருதினாலுங்கூட நான் பல இடங்களிலும் சென்று பொதுக் கூட்டம் போட்டு சத்தியாக்கிரகத்தைப்பற்றிப் பேசினேன்; காரசாரமாகப் பேசினேன்! ´கீழ்ச் சாதி மக்களான நாம் உள்ளே தெருவில் போவதால் தீட்டுபட்டு விடும் என்று சொல்லும் வைக்கத்தப்பனைப் போட்டு வேட்டி துவைக்கணும்´ என்றெல்லாம் கடுமையாகப் பேசினேன்.
சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் வைக்கம் வந்து கூடிவிட்டார்கள். அது ராஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 5, 6-நாள் வரை சும்மாதான் இருந்தார். பலரும் போய் அவரிடத்தில் நான் பேசுவது குறித்து முறையிட்டார்கள். பிறகு ராஜாவினால் சும்மா இருக்க முடியவில்லை.
இப்படி சுமார் 10-நாள் ஆனவுடனேயே ஒரு போலீஸ் (சூப்பிரண்டென்ட்) அதிகாரி, அவர் அய்யங்கார் (பிச்சு அய்யங்கார் என்று நான் இந்த ரவீந்திரன் புத்தகத்திலிருந்து அறிந்து கொண்டேன்) அவர் முயற்சியால் பி.சி. 26-ன் படி, தடையுத்திரவு போட்டார். அந்த நாட்டிலே 26-என்பது, இப்போது இங்கே 144- தடையுத்திரவு போன்றது.
நானும் சட்டம் மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்தேன். உடனே நான் சட்டத்தை மீறிப் பேசினேன். என்னுடன் (தற்போது காங்கிரசுக்காரராக இருக்கும்) திரு. அய்யாமுத்து அவர்களும் மற்றும் இருவரும் சட்டம் மீறினோம். எங்களைக் கைது செய்தார்கள். எல்லோருக்கும் ஒரு மாதம் வெறுங்காவல் போட்டார்கள்! என்னை அருவிக்குத்தி என்ற ஊரில் உள்ள ஜெயிலிலே வைத்தார்கள்! அதற்குப் பிறகு எனது முதல் மனைவியார் திரு. நாகம்மையாரும் பிறகு நான் வெளியே வந்தவுடன் எனது தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும் மற்றும் சிலரும் வந்து நாடெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார்கள். நான் விடுதலை ஆகிவந்து அதே மாதிரி மறுபடியும் திட்டம் போட்டேன்.
நான் வெளியே வருவதற்குள் இந்தக் கிளர்ச்சிக்கு ஏராளமான அளவில் ஆதரவு பெருகிவிட்டது. மளமளவென்று ஆள்களும் வந்து சேர ஆரம்பித்தனர். ஏராளமான பேர்கள் பல பகுதியிலும் சென்று சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். எதிரிகளும் அடிதடி, காலித்தனம், கலவரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு இதை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டுமென்று பலவித முயற்சிகளும் செய்து பார்த்தார்கள்.
ஆனால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டேயிருந்தது! வெளிநாடுகளிலிருந்து மலையாளிகளும், சாதிக்கொடுமை என்பதைக் கண்டு மனம் துடித்து அதற்கு தங்கள் எதிர்ப்பையும் சாதிக்கொடுமைகளை எதிர்த்துச் செய்யப்படும் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவையும் காட்டும் வண்ணம் தினம் ரூபாய் 50, 60, 100-என்று மணியார்டர் அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.
பெரிய பந்தல் போட்டு தினசரி போராட்ட வீரர்கள் முகாம் செய்திருந்த வீட்டில் 200, 300-பேர் சாப்பிடுவார்கள். தேங்காயும் மற்றக் காய்கறிகளும் மலை மலையாகக் குவிந்து கிடக்கும். பெரிய கல்யாண வீடு மாதிரி காரியங்கள் நடைபெறும்!
திரு. இராசாகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். "நீ ஏன் நம் நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டிலே போய் ரகளை செய்கிறாய்? அது சரியல்ல, அதை விட்டுவிட்டு நீ இங்கு வந்து விட்டுவிட்டுச் சென்ற வேலைகளைக் கவனி" என்று எழுதினார்.
அப்போது இருந்த எஸ். சீனிவாசய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்து வரச் சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலும் எழுதினார்கள். ஆனால் இதற்குள் சத்தியாக்கிரக ஆசிரமத்தில் 1000-பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும், தொண்டர்கள் ஊர்வலமும் நடந்தன. உணர்ச்சி வலுத்துவிட்டது.
பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்த என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20, 30-ஆள்களையும் 2000- ரூபாயையும் கையிலெடுத்துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தங்களின் சாப்பாட்டுச் செலவை தாங்களே ஏற்றுக்கொண்டு ஆதரவு தருவதற்காக உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாம் சீக்கியர்கள் வந்து ´இந்து மதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்கள்´
உடனே அதன்பேரில் காந்தியார் துலுக்கன், கிறிஸ்துவன், சீக்கியன் ஆகிய பிற மதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று எழுதிவிட்டார்கள்.
காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாய்பு, கிருஸ்துவன் எல்லாம் போய்விட்டார்கள். அதுபோலவே தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசஃப் ஜார்ஜ்க்கு இராஜாகோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். "இந்து மதச்சார்புள்ள இந்தக் காரியத்தில் நீ சேர்ந்திருப்பது தப்பு" என்றார்.
அதை ஜோசஃப் ஜார்ஜ் அவர்கள் இலட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார். "நான் என் சுயமரியாதையை விட்டுவிட்டு இருக்கமாட்டேன். வேண்டுமானால் என்னை காங்கிரசிலிருந்து விலக்கி விடுங்கள்" என்றார். தற்போதைய நாகர்கோவில் பயோனீர் டிரான்ஸ்போர்ட்டைச் சேர்ந்த சேவு என்பவரும், அண்மையில் காலஞ் சென்ற டாக்டர் எம்.இ.நாயுடு (திரு.எம்.எம். பெருமாள் நாயுடு அவர்கள் இந்தப் பேச்சுக்கு முதல் நாள் இரவு நாகர் கோவிலில் காலமானார். பிறகு தந்தை பெரியார் சென்று துக்கம் விசாரித்தார் என்பதை வாசகர்கட்கு நினைவூட்டுகிறோம்) அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதைவிட்டுப் போகமாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்கள் என்றாலும், காந்தி சத்தியாக்கிரகத்திற்கு விரோதமாக எழுதி பணத்தையைும், ஆளையும் தடுத்துவிடுவாரோ என்று பயப்பட்டார்கள்.
அந்தச் சமயம் சுவாமி சிரத்தானந்தா அவர்கள் வைக்கம் வந்து தாம் பணத்திற்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோதமாகவே சத்தியாக்கிரகம் நடந்துவந்தது.
இதற்கிடையிலே நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. எங்கள் போராட்டத்திற்குப் பெரிய மரியாதையும், செல்வாக்கினையும் தேடிக் கொடுத்து விட்டது. இந்தக் காந்தியார் கட்டளை. இந்தச் சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6-மாதக் கடினக்காவல் தண்டனை விதித்து ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.
பிறகு சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலிலே இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களும் சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு "சத்ரு சங்கார யாகம்" என்ற ஒன்றை வெகு தடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள்.
ஒருநாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்து, என்ன சேதி இப்படி வெடிச்சத்தம் கேட்கிறது? இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான், "மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாமல் இருந்து மகாராஜா நேற்று ராத்திரி திருநாடு எழுந்துவிட்டார்" என்றான்.
அதாவது, "இராஜா செத்துப்போனார்" என்று சொன்னான். அவ்வளவுதான் மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள்ளாகவே ரொம்பப் பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திரும்பி மகாராஜாவைக் கொன்றுவிட்டது என்றும், அந்த யாகம் சத்தியாக்கிரகக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது.
அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவர ஆரம்பித்தது.
இராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன் அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் (அதாவது ராகவய்யா) என்னிடத்தில் நேரே இராணி பேசக்கூடாது என்று கருதி திரு. இராசாகோபாலாச்சாரிக்குக் கடிதம் எழுதினார்.
இராசகோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் இராணி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும் புகழும் வந்துவிடுமோ! அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி காந்தியாருக்கே அந்த வாய்ப்பை அளித்துக் காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்ட வேண்டுமென்று தந்திரம் செய்து காந்திக்குக் கடிதம் எழுதினார். எனக்கும் அதைப்பற்றிக் கவலையில்லை. எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும். நமக்குப் பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக் கொண்டேன்.
தமிழச்சி 30.01.2010
* சிறுகுறிப்பு: (தந்தை பெரியாரின் சொற்பொழிவில் இருந்து வைக்கம் போராட்டத்தின் தொடக்க நிகழ்வுகளை மட்டும் ஒரு பகுதியாக தொகுத்திருக்கிறோம். முழுமையான செய்திகளை அறிய வேண்டுமானால் "தீண்டாமையை ஒழித்தது யார்?" (வைக்கம் போராட்ட வரலாறு) என்ற சிறுபுத்தகத்தை வாசிக்கவும்)
|
 |