 |
அனார்க்கிஸ்டுகளுக்கு ´அரசாங்கம் என்பதே சமூகத் தீமைகளுக்கு காரணம்´ என்பது சித்தாந்தமாகும். அரசாங்கம், சிறை, நீதிமன்றம், போலீஸ், இராணுவம், நிர்வாகம் இவைகள் சமூகத்தில் இயங்கக் கூடாது என்பது அனார்க்கிஸ்டுகளின் கொள்கைகளுள் முக்கியமானது. ஆனால் வர்க்கப் போராட்டம் குறித்த சித்தாந்தம் பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பல விமர்சனங்கள் உண்டு.
அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம் தத்துவத்தின் குரு ´பிரௌதன்´ [Pierre-Joseph Proudhon][1][2][3] கார்ல் மார்க்ஸ் கொள்கை அரசியல் போராட்டத் தத்துவத்தில் மார்க்ஸிய தத்துவத்திற்கு எதிரான பிரௌதன் தத்துவார்த்தத்துடன் அதிகம் போராட வேண்டியிருந்தது.
´வறுமையின் தத்துவம்´ [´philosophy of poverty´] என்ற நூலை பிரௌதன் எழுதிய போது அதில் சமூக வளர்ச்சிக்கான சட்டதிட்டங்கள் குறித்த விரிவான திட்டங்களை தொகுத்திருந்தார். கூலி உயர்வுக்கான தொழிலாளர்கள் போராட்டங்களில் இருந்து ´சொத்துரிமை என்பது திருட்டுத்தனம்´ என்ற கருத்தியல் வரையில் பிரௌதனின் சிந்தனைகள் தத்துவங்களான பதிவு செய்யப்பட்டிருந்தன. கார்ல் மார்க்ஸ்சுக்கோ பிரௌதனின் வாதங்கள் அபத்தமாக தெரிந்தது.
உதாரணமாக கூலி உயர்வு போராட்டம் குறித்து பிரௌதன் சொல்கிறார்:
"செல்வத்தின் ஒரு விகிதம் கூலி. ஒவ்வொரு தினமும் இக்கூலியை பெறுவதற்காக தொழிலாளர்கள் அதற்கான உற்பத்தி செய்கிறார்கள். கூலியை இரண்டு மடங்காக ஆக்கினால் ஒவ்வொரு உற்பத்தியாளனுக்கும் அவன் உற்பத்தி செய்வதைவிட அதிகமாகக் கொடுப்பதாக தானே ஆகும். இது முண்பாடானது. ஒரு சில தொழில்களில் கூலி உயர்வு ஏற்பட்டாலும் கூலி உயர்வுக்கான போராட்டங்களால் தொழிலாளர்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. கூலி உயர்ந்தால் அதே விகிதாச்சாரப்படி உணவுப் பொருட்களின் விலையும் உயரும்! ஆகவே தொழிலாளர்களின் போராட்டம் என்பது தேவையற்றது."
மேலும் தொழிலாளர்களின் போராட்டம் [ஸ்ட்ரைக்] சட்டவிரோதம் என்கிறார் பிரௌதன்.
"ஒவ்வொரு தொழிலாளியும் தன்னிஷ்டப்படி தன் உடலையும் கையையும் உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஏகபோக உரிமைக்கு பலாத்காரம் விளைவிப்பதென்றால் அதைத்தான் சமூகம் ஒருக்காலும் அனுமதிக்காது" என்கிறார் பிரௌதன்.
அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசத்தின் முக்கிய தத்துவமே இதுதான். தொழிலாளர் சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளை நிராகரிக்கிறது. இதன் மூலம் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியில் போராடுவதை தடுப்பதன் மூலம் முதலாளி வர்க்க அரசு நீடிப்பதற்கு உதவுகிறது.
பிரௌதன் எழுதிய ´வறுமையின் தத்துவம்´ [´philosophy of poverty´] என்ற இத் தத்துவமே கார்ல் மார்க்சுக்கு எதிர்ப்புணர்ச்சியை கொடுத்தது.
´வறுமையின் தத்துவம்´ [´philosophy of poverty´] நூலுக்கு எதிராக ´தத்துவத்தின் வறுமை´ [´poverty of philosophy´][4] என்ற நூலை 1847-இல் கார்ல் மார்க்ஸ் எழுதினார். இந்நூல் முதன்முதலாக பாரிசிலும், பிரேசல்லிலும் வெளியிடப்பட்டது. இதில் பிரௌதன் தத்துவத்திற்கு எதிராக தன்வாதத்தை முன்வைக்கிறார் கார்ல் மார்க்ஸ்.
"மனிதர்களில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத ஒரு கூட்டத்தை யந்திரத் தொழில் ஓரிடத்தில் குவிக்கிறது. தொழிலாளர்களுக்குள் போட்டி நலன்களை ஒருவருக்குள் ஒருவரை வேறுபடுத்திவிடுகிறது. ஆனால் தொழிலாளர்களுக்குள் பொதுவான தங்கள் சம்பளத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பொதுவான தொழிலாளர் நலன் சார்ந்த சிந்தனை முதலாளியை எதிர்க்கும் உணர்வோடு ஒன்றுபடுத்தகிறது. இந்த தொழிலாளர் ஒற்றுமைக்குள் இரண்டு லட்சியங்கள் உண்டு. ஒன்று தங்களுக்குள் இருக்கும் போட்டி உணர்வை நீக்குவது. அதனூடாக முதலாளியை எதிர்த்து ஒன்றிணைவது. இந்த எதிர்ப்பின் முதல் நோக்கம் சம்பளப் பாதுகாப்பாக இருப்பினும் முதலாளிகள் அடக்குமுறையை அதிகரிக்க அதிகரிக்க தனித்தனியாய் இருக்கும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நின்று முதலாளித்துவத்தின் தாக்குதலை எதிர்க்கிறது. அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளப்பாதுகாப்பை விட சங்கப் பாதுகாப்பு முக்கியதுவமாகிவிடுகிறது.
இது நூற்றுக்கு நூறு உண்மையாய் இருப்பதால் தான் சங்கங்கள் சம்பளப் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றது என்று கருதிய இங்கிலீஷ் பொருளாதார நிபுணர்கள் தொழிலாளர்கள் சம்பளத்தின் பெரும்பகுதியை தங்கள் சங்கங்களுக்கும் அவற்றின் நடவடிக்கைகளுக்கும் தியாகம் செய்வதைக் கண்டு பிரமித்து நின்றன. தொழிலாளர்களின் உண்மையான வர்க்கப்போராட்டத்தில் எதிர்காலத்திற்கு தேவையான அவசியமான திட்டங்கள் அனைத்தும் ஒன்றுபடுத்தப்படுகின்றன.
இக்கட்டத்திற்கு சங்கம் வளர்ச்சி பெற்றதும் அரசியல் தன்மையை பெறுகின்றது."
என்று குறிப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ்.
ஆனால் பிரௌதன் தான் சாகும் வரையில் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. 1865-இல் இறக்கும் தருவாயில் கூட "தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் திறமை" என்கின்ற நூலை எழுதினார். அதிலும் 3-ஆம் நெப்போலியன், லிபரெல் தலைவர் மார்சல் ஆலிவர் போன்றவர்களை கடுமையாக தாக்கி எழுதி இருந்தார்.
மீண்டும் மீண்டும் திடமாகவே தன் வாதத்தை கொண்டு செல்லும் பிரௌதன் சங்கம் ஸ்தாபிப்பதை அனுமதிக்கும் சட்டம் உண்மையில் சட்டத்திற்கு விரோதமானது என்றும் பொருளாதாரக் கொள்கைக்கும் எதிரானது என்றும் சமூக கட்டுப்பாடுகளுக்கும் முரணானது என்கிறார்.
இச்சட்டத்தின் மூலம் கூலியை உயர்த்தவும், குறைக்கவும் சங்கம் வைத்துக் கொள்ளுவதென்றால் அது உணவுப் பொருள் அல்லது இதரப் பண்டங்களின் விலைகளை ஏற்றவும், இறக்கவும் சங்கம் வைப்பதைப் போல் தான் ஆகும் என்கிறார்.
´சொத்துரிமை என்பது திருட்டுத்தனம்´ என்று வாதிடுபவர் தொழிலாளர் சங்கம் அரசியலில் நுழைவதையும், கூலி உயர்வு கோரிக்கையையும், தொழிலாளர்களின் ஸ்டைக் என்பது சட்ட விரோதம் என்றும் எப்படி பிரௌதனால் கூறமுடிந்தது?
அதனால் தான் கூலி உயர்வு போராட்ட தத்துவத்தின் முடிவாக "இரண்டும் இரண்டும் நான்கு என்பதைப் போல் இது நிச்சயமான சமாச்சாரம்" என்று தனக்குத்தானே பிரௌதன் தம்பட்டம் அடித்துக் கொண்ட போது,
கார்ல் மார்க்ஸ் அபத்தமான வாதங்களை மேற்காட்டி, "இரண்டும் இரண்டும் நாலு என்பதைத் தவீர மீதி வாதங்கள் அத்தனையையும் மறுக்கிறோம்" என்று கூறினார்.
"பிற்போக்கான கொள்கைகளும், வீரமொழிகளும் கலந்த நடுத்தரவர்க்க சோஷியலிஸ்ட் பிரௌதன். சாமர்த்தியம் மிகுந்த பிரசாரகர். தலை முதல் கால் வரை நடுத்தர வர்க்கத்தின் தத்துவாசிரியர், பொருளாதார நிபுணர் பிரௌதன்" என்றார் கார்ல் மர்க்ஸ்.
வார்த்தைக்கு வார்த்தை புரட்சி பேசும் போரியர், ஓவன், பிரௌதன் போன்ற புரட்சிக்காரர்களின் வாதங்களுக்காக தொழிலாள வர்க்கம் நடத்தும் போராட்டங்களை எவ்வளவு கேவலமாக அகம்பாவமாக ஏளனமாக மதிப்பிடுகிறார்கள் என்பதைக் கண்டு கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் வருத்தத்தோடு தங்களுக்குள் கடிதத்தின் மூலம் ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.
[அக்கடித்தில் இருந்த வாதங்கள் பின்னாளில் "தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸ்" எழுதிய நூலில் காணப்படுகிறது]
பின்னாளில் பிரௌதனின் தத்துவங்களை மாற்றிக் கொள்ளும் சூழலுக்கு ´அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம்´ தள்ளப்பட்டது.
பிரௌதனின் சிஷ்யர்களில் முக்கியமானவர்களான ´மைகேல் பாக்குனின்´ அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசத்தின் மாற்றத்திற்கு காரணமானார்.
"பிரௌதன் யதார்த்தவாதியாக இருக்க முயன்றும் மானசீகவாதியாகவே இருந்தார். பைபிளும், ரோமன் சட்டமும் பிரௌதனுக்கு ஊக்குவிக்க காரணமாக இருந்தன. பிரௌதன் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அவரிடமே தவறும் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு சிந்தனை செய்து கற்பனைப் பாதையில் பிரபஞ்சத்தின் உண்மையைக் காண்பதை சுட்டிக்காட்டினேன்" என்கிறார்.
சரி, மைகேல் பாக்குனின் சமூகப்பார்வை எப்படி இருந்தது?
கொடுமை! மகா கொடுமை!!
அடுத்தமுறை ´மைக்கேல் பாக்குனின்´ தொழிலாளர் வர்க்க சிந்தனைகளை பார்ப்போம்!
தமிழச்சி 09.02.2010
தொடர்புடைய இணைப்புகள்:
* Pierre-Joseph Proudhon[1][2][3] http://goo.gl/PbWK http://goo.gl/O6Bh http://goo.gl/oqHQ http://www.youtube.com/watch?v=msYOIyO8T5Q * The Philosophy of Poverty[4] http://goo.gl/qW1J * poverty of philosophy http://www.youtube.com/watch?v=b5dTE00trRY http://www.youtube.com/watch?v=j7Vl0peys90
|
 |