Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


FEB
23
2010

நீங்கள் எந்த வகை?

சிந்தனையாளர் ´பெர்டிராண்டு ரஸ்ஸல்´ [Bertrand Russell][1] சமுதாயத்தில் வாழ்கின்ற மக்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்:

முதல் பிரிவில் மனிதர்களில் சிலர் நாலு பேரைக் கூட்டித் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல விரும்புகின்றார்கள். பிறரைத் தாங்கள் ஏவியபடி நடக்கச் செய்யும் ஆற்றல் இவர்களிடம் இருக்கின்றது.

இரண்டாவது பிரிவு மக்கள் எப்போதும் யாரையேனும் பின்பற்றிச் செல்லுவதையே விரும்புவார்கள். முக்கிய விஷயங்களில் தங்கள் சொந்த சிந்தனைகளையும், ஊகங்களையும் நம்ப முடியாது இவர்களுக்கு! வெற்றிக்கு வழி சிறப்புமிக்க தலைவர்களைத் தொடர்வதே என்பது இவர்கள் சித்தாந்தம். இவ்வித மக்களே சமுதாயத்தில் பெரும்பான்மையினராக இருக்கின்றார்கள்.

மூன்றாவது பிரிவினர்: இவர்களுக்குத் தலைமைப் பதவியிலோ தொண்டர் நிலையிலோ ஆர்வம் இல்லை. ´ஆளை விடுங்கள்´ என்று சதா ஒதுங்கியே நின்று விடுவார்கள். சமுதாயத்தின் கூட்டுச் செயற்பாடுகளில் பங்கு பெறவும் தயங்குவார்கள். நாலு பேர் சென்று வலுக்கட்டாயமாய்க் கையைப் பிடித்து இழுத்து வந்தால் அரை மனதோடு வந்து கலந்து கொள்வார்கள். தேர்தல்களில் "ஓட்" செய்யப் போவார்களா என்பது சந்தேகமே.

இதில் இரண்டாம் வகையினர் பிரச்சனைக்குரியவர்கள் இல்லை.

முதல் வகையினர் மக்கள் கூட்டமெல்லாம் தன் பின்னால் ஆட்டு மந்தை போல் தொடர்ந்து வரவேண்டும். தான் இடும் கட்டளைகளை ஏன்? எதற்கு? என்று கேட்காமல் வாயைப் பொத்தி வரவேற்றுக் கீழ்படிந்த நடக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் பலர் சர்வாதிகளாக விரும்புகிறார்கள்.

அவ்வாறு தம்மைப் பின்பற்றும் அடிமை மந்தையைப் பயன்படுத்தி ஜனநாயகம், மக்கள் தீர்ப்பு என்ற ஒரு கானல் உருவெளித் தோற்றத்தை உண்டாக்கி தம் விருப்பம் போல் ஆட்சி நடத்திக் கொண்டு போவதே அவர்கள் நோக்கமாக இருக்கின்றது.

´அரசு´ இல்லையேல் தனிமனிதர்கள் இல்லை என்பது சர்வாதிகாரத்தின் கோட்பாடு. அரசுக்காக தனிமனிதர்களின் நலன்களைப் பலி கொடுப்பதில் தவறு இல்லை! அதுவே தியாகம் என்பார்கள் இவர்கள்.

இது ஜனநாயகத்திற்கு நேர் எதிரிடையான கருத்து!

சர்வாதிகாரிகள் மக்களை வலைப்போட்டு பிடித்துத் தம்முடைய கட்டுக்குள் வைக்கும் முயற்சியில் கொடுமை நிறைந்த குறுக்கு வழிகளையும், கையாளத் தயங்குவதில்லை. அடி அல்லது பரிசு என்று கொடுத்தால் பெரும்பாலோர் படிந்து விடுவார்கள். எஞ்சிய சிலரே கருத்துச் சுதந்திரம் என்று கூறிப் பிடிவாதம் செய்வார்கள்.

எத்தனை அடி கொடுத்தாலும், நகக்கண்களில் ஊசி  ஏற்றிச் சித்திரவதை செய்தாலும் அவர்களுக்குக் கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ளத் தெரியாது.

பட்டம், பதவி, செல்வாக்கு என்று ஆசை காட்டினாலும் சிறிதும் மயங்குவதில்லை. இத்தகைய விடாக்கண்டர்களைப் பிடித்துத் தனிச் சிறைகளில் அடைத்து ´மூளைச்சலவை´ செய்யத் தொடங்குகின்றன சர்வாதிகார ஆட்சிகள்!

´மூளைச்சலவை´க்கு வன்முறை தேவையயில்லை. அதன் வழி வன்முறையை விட ஆயிரம் மடங்கு கொடியது! மனித மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதை விஞ்ஞானிகளும், மனத்தத்துவ ஆய்வாளரும் விளக்கி இருக்கிறார்கள்.

அறிவியலை "இஞ்செக்ஷன்" ஊசியாகக் கொண்டு மாற்றுக் கருத்துக்களை முளைக்குள் செலுத்திவிடுவதே மூளைச்சலவை. எத்தகைய வலுவான சித்தவுறுதி படைத்தவர்களுக்கும் ஈடு கொடுப்பது கடினம். மூளையில் ஏற்கனவே பதிந்த எழுத்துக்களை அழித்துவிட்டுப் புதியதாக ஏதேனும் எழுதி விடுவதே மூளைச் சலவை. இதற்கு உள்ளானவர்களின் தன்மை முற்றிலும் தலைக்கீழாக மாறிவிடும்! வேறு ஒரு நபர் உள்ளே கூடு பாய்ந்து கொண்டது போல்...

தமிழச்சி
27/10/1997

தொடர்புடைய இணைப்பு:
 
* Bertrand Russell[1]
http://ow.ly/1aqZe


 

 

 38 

 

 39 

 

 40 

 

 41 

 

 42 

 

 43 

 

 44