 |
பத்தொண்பதாம் நூற்றாண்டு.
உலக வரலாற்றில் ஒர் முக்கிய திருப்புமுனையாக அமைந்த நூற்றாண்டு பலமாறுதல்களும், அறிவியல் வளர்ச்சிகளும் உண்டாக்கிய நூற்றாண்டு. அடிமைத்தனம் ஒழித்த நூற்றாண்டும் இதுதான். பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் சமம். அனைவரும் சமஉரிமையோடு வாழ வேண்டும் என்று என்று சிந்தித்த நூற்றாண்டு. மேலும் ஒரு சிறப்பு இந்த நூற்றாண்டுக்கு உண்டு. பிரான்ஸ் நாட்டு மகாகவிஞன் "விக்தோர் உய்கோ" [Victor Hugo] பிறந்து பெரும்புகழ் பெற்ற நூற்றாண்டு.
26.02.1802-அன்று இரவு 10.30-மணிக்கு விக்தோர் உய்கோ பிறந்தார். குழந்தை பிறந்த போது மிகச் சிறியதாக இருந்தது. குழந்தை பிழைக்காது என்று டாக்டர் சொல்லிவிட்டார். அப்படிப்பட்ட குழந்தை தான் அழியாப்புகழ் அடைந்தது.
விக்டோர் உய்கோவின் சிந்தனைகள் சில பாருங்கள்:
* நேசியுங்கள் என்றார் ஏசு. பணம் கொடுங்கள் என்கிறது கோயில்.
* மூடத்தனமான மோட்சத்தை விட அறிவுள்ள நரகம் மிக மேலானது.
* இயற்கை பேசும்போது - மனித இனம் அதைக் கவனிக்காமலிருப்பது துன்பமானது.
* நீதித்துறையில் சிலமனிதர்களைப் பார்க்கும் போது பெருவழியில் திருடர்களைக் காணும்போது நடுங்குவதைப் போல நடுங்க வேண்டியுள்ளது.
* இப்போது நான் எதற்கு ஏற்றவன்? இறப்பதற்கு [01-01-1874]
* நீங்கள் ஒரு பள்ளியைத் திறக்கும் போது ஒரு சிறைச்சாலையை மூடுகிறீர்கள்.
* ஐந்தாம் மாடியிலிருந்து ஒரு பூச்சாடியை உங்கள் தலைமேல் போடும் மனிதர்கள் உண்டு. ஆனால் அவர்கள் சொல்லுவது உங்களுக்கு நான் இந்த ரோஜாப்பூக்களை அளிக்கிறேன் என்பது.
* இந்த உலகத்தில் போரிடும் பெரிய மனிதர்கள் மூவர் எப்போதும் உண்டு. முதலாவான் மனிதர்கள் இருப்பவன், இரண்டாவான் இருந்தவன் மூன்றாவான் இருக்கப்போகிறவன்.
* கொலையின் வடிவங்கள் என்று மனிதனை மனிதன் கொல்வது மனிதக்கொலை. சட்டம் மனிதனைக் கொல்வது தூக்கு, மக்களை மக்கள் கொல்வது போர்.
* புரட்சிக் காலத்தில் நடுநிலை வகிப்பவன் கையாலாகாதவன்.
* நல்லவனாக இருப்பது எளிது. நேர்மை உள்ளவனாக இருப்பது தான் கடினம்.
* உண்மையான நண்பனாக அல்லது உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே.
* பூவை உருவாக்குவது விதையும், சூரிய ஒளியும். பெரிய மனிதனை உருவாக்குவது திறமையும், வாய்ப்பும்.
* என் சூழ்நிலையை நான் என் பகைவர்களின் முகத்திலிருந்து முடிவு செய்கிறேன்.
* ஓவ்வொரு மனிதனும் எல்லா நாட்களிலும் பள்ளிக்குப் போகிறான்.
விக்தோர் உய்கோவின் கவிதைகளும், சிந்தனைகளும் பிரான்ஸ் நாட்டின் பொக்கிஷங்களாக கருதப்படுபவை. அவர் சாகும் வரையிலும் சமுதாயத்திற்காக எழுதிக் கொண்டே இருந்தார்.
அவர் இறப்பதற்கு முன்பு கூட அதாவது 19.05.1885-அன்று தன்னுடைய குறிப்புச் சுவடியைக் கொண்டு வரும்படி கேட்டார்....
உடம்பு பலவீனமடைந்து மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருந்த அவர் மிகச் சிரமத்துடன் எழுதுவதற்கு முயற்சித்தார்....
ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிய அந்த கரங்களுக்கு அன்று எழுத முடியாமல் மிகவும் தடுமாறியது. கைக்குக்குள் இருந்த இறகு கனத்தது...
எழுதும் போது சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு படிப்பதற்கு சிரமமாக இருந்தன....
விக்டோர் உய்கோ எழுதிய கடைசி எழுத்துக்களும் இவைதான். அதற்கு பிறகு அவர் கண்களை மூடி படுத்துக் கொண்டார். நான் கறுப்பு வெளிச்சத்தை பார்க்கிறேன் என்று அவர் வாய் முணு முணுத்தது.
1885- மே 22- வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.27- மணிக்கு விக்டோர் உய்கோ மறைந்தார். எழுத்துமலை ஒன்று சாய்ந்தது. லட்சியப் பேரொளி அணைந்தது.
அவர் எழுதிய கடைசி வார்த்தை என்ன தெரியுமா?
"நேசித்தல் என்பது செயலாற்றல்."
தமிழச்சி 29.06.1997
தொடர்புடைய இணைப்பு:
* விக்டோர் உய்கோ குறித்து மேலும் அறிய... http://ow.ly/1bFOC
|
 |