 |
சில திங்களுக்கு முன் ´அனார்க்கிஸ்டுகள்´[1] பற்றி குறிப்பிட்டிருந்தோம். ´அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம்´ தத்துவத்தின் குருவான ´பிரௌதன்´[Pierre-Joseph Proudhon] சித்தாந்தம் அவர் காலத்திற்கு பின் எப்படி மாற்றம் அடைந்தது என்னும் வரலாற்றை இன்று தொடருவோம்....
1868-செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி மார்க்ஸ் எங்கல்சுக்கு கடிதம் எழுதுகிறார்:
"ஜினீவா´ மற்றும் ´லாஸேன்னிலும்´ இருந்த தொழிற்சங்கத்தை எதிர்த்த பிரெஞ்சு பிரெதனிஸ்டுகளும், பெல்ஜிய பிரௌதனிஸ்டுகளும் இன்று தொழிற்சங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருப்பது பெரிய முன்னேற்றத்தை குறிக்கிறது." [மார்க்ஸ்]
மார்க்ஸ் இப்படி குறிப்பிடுவதால் பிரௌதனிஸ்டுக்களின் எல்லா செயல்பாடுகளையும் ஆதரித்ததாக பொருள் கொள்ளக்கூடாது. தொழில்சங்கத்தின் ஆதரவாளர்களாக பிரௌதனிஸ்டுகள் மாறியதை மட்டுமே சுட்டுக்காட்டுகிறார்.
´பிரௌதன்´ 1865-இல் இறக்கும் வரையிலும் தொழில்சங்கங்களுக்கு எதிரான கருத்துக்களையே சொல்லிக் கொண்டிருந்தார்.
கூலி, ஸ்தாபித விதிகள், பண்டங்களின் விலை நிர்ணயம், ஸ்தாபனத்தின் முக்கியத்துவத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டிருந்தார் பிரௌதன்.
முதலாளிகளை எதிர்த்து கூட்டுப் போராட்டம் [ஸ்டைக்], தொழிலாளர்கள் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றார். அதன் பாதிப்பு தொழிலாளர்களுக்கே என்றார்.
பிரௌதனின் இத்தத்துவத்திற்கு மார்க்ஸ், ´பிரௌதனின் பிற்போக்கான அபத்தம்´ என்று கண்டனம் தெரிவித்ததோடு, ´தத்துவத்தின் வறுமை´ [´poverty of philosophy´][2] என்ற புத்தகத்தையும் எழுதி இருந்தார் என முன்பு எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டி இருந்தோம்.
இக்கருத்து பிரௌதனின் மறைவுக்கு பின் என்ன ஆனது என்பதையும் கவனிப்போம்.
பிரௌதனின் சீடரான ´மைக்கேல் பாக்குனின்´[Mikhail Bakunin][3] பிரௌதனின் உலகக் கண்ணோட்டத்தில் உள்ள பலவீனங்களையும், குறைப்பாடுகளையும் மாற்றம் செய்தார். அதுவே ´பாக்குனினிஸம்´[4]
´பாக்குனினிஸம்´ உருவாக்குவதற்கு ´பிரௌதனிஸ´த்தை குறித்து மைக்கேல் பாக்குனின் கூறுகிறார்:
"யதார்த்தவாதியாக இருக்க வேண்டுமென்று எவ்வளவோ முயன்றும் பிரௌதன் மானசீகவாதியாகவே இருந்தார். அதற்கு காரணமாக கிருஸ்தவ வேதமான பைபிளும், ரோமன் சட்டங்களும் பிரௌதனை ஊக்குவித்தன...
பிரௌதன் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இது குறித்து விவாதித்தேன். ஆனால், பிரௌதன் சாகும் வரையில் தவறான நம்பிக்கையையே ஆதாரமாகக் கொண்டிருந்தார்..."
என்று தன் குரு பிரௌதனைப் பற்றி ´மைக்கேல் பாக்குகனின்´ குறிப்பிடுகிறார்.
தொழிலாளர் குறித்து பிரௌதன் கொண்டிருந்த கருத்தை விட மைக்கேல் பாக்குனின் கருத்து இவ்வாறு கூறுகிறது:
"பிரௌதனின் அராஜக அமைப்பை மாயாவாதத்தில் இருந்தும், ஆத்மார்த்திக வாதத்தில் இருந்தும் நாங்கள் மாற்றி விரிவுப்படுத்தி இருக்கிறோம்."
திருத்தி அமைக்கப்பட்ட ´பிரௌதனிஸம்´ பாக்குனின் தத்துவத்தில் மாற்றம் செய்யப்பட்டு ´பாக்குனினிஸம்´ உருவாக்கப்பட்டதும் ´இன்டர் நேஷனலின் கொள்கை´ என்று ஓர் நூலை எழுதுகிறார் பாக்குனின்.
பாக்குனின் தத்துவ மாற்றத்தில் தொழிற்சங்கங்களின் பங்கு பற்றி எழுதுகிறார்:
"தொழிலாளர் விடுதலை என்பது தொழிலாளர்களுடைய சொந்த இலட்சியம். இவையே ஆயிரம் மடங்கு உண்மை. நமது மகத்தான யூனியனுக்கும் இவையே பிரதான அடிப்படை. இருப்பினும் ஏராளமான தொழிலாளர்கள் ஒன்றும் அறியாதவர்கள். அவர்களுக்கு கொள்கை என்ன என்பது தெரியாது. கோட்பாடு என்ன என்பது தெரியாது. அதனால் தொழிலாளர் முன் இருப்பது ஒரே ஒரு பாதை மட்டுமே. அது நடைமுறையில் விமோசனம் தேடும் பாதை...
இந்த நடைமுறை என்பது என்னவென்றால் முதலாளிகளை எதிர்த்து ஒற்றுமை அடிப்படையில் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்கள். போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் ஸ்தாபனங்கள் பாதுகாப்பு நிதிக்கழகங்கள் கண்டிப்பாகத் தேவை. இந்த உண்மையை நாம உணர வேண்டும்...
அதேப்போல் நம் தத்துவ விதிகளின்படி அரசியலை நிராகரித்துவிட வேண்டும். ´இன்டர்நேஷன்´ மூலம் எல்லா நாடுகளிலும் தொழிலாளர்களுடைய கிளர்ச்சி நடவடிக்கைகளை பொருளாதாரப் பாதையில் நடத்தப்பட வேண்டும்.
தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைப்பதும் கூலியை உயர்த்துவதும் லட்சியமாக இருக்க வேண்டும். தொழிலாளர் ஸ்தாபனமும், பாதுகாப்பு நிதி திரட்டுவதும் கடமையாக இருக்க வேண்டும்.
ஆக போராட்டங்கள் பொருளாதாரக் கிளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும்." [பாக்குனின்]
மீண்டும் மார்க்ஸ் எழுதிய கடித்தத்திற்குச் செல்வோம்....
1868-செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி மார்க்ஸ் எங்கல்சுக்கு கடிதம் எழுதுகிறார்:
´ஜினீவா´ மற்றும் ´லாஸேன்னி´லும் இருந்த தொழிற்சங்கத்தை எதிர்த்த பிரெஞ்சு பிரெதனிஸ்டுகளும், பெல்ஜிய பிரௌதனிஸ்டுகளும் இன்று தொழிற்சங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருப்பது பெரிய முன்னேற்றத்தை குறிக்கிறது...
மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிட்டதற்கு காரணம் 1866-இல் ஜினீவாவில் தொழிலாளர் போராட்டங்களையும் தொழிற்சங்கத்திற்கும் முதன்முறையாக அனார்க்கிஸ்டுகள் ஆதரவு கொடுத்ததும் அதேப்போல் லாஸேன்னியில் 1867-இல் தொழிலாளர் போராட்டத்திற்கும், அனார்க்கிஸ்டுகள் ஆதரவு கொடுத்ததையும் கவனித்து எங்னெல்சுக்கு மார்க்ஸ் கடிதம் எழுதினார்.
ஆனால் ´இன்டர் நேஷனலின் கொள்கை´ நூலில் பாக்குனினிஸத்தின் தத்துவங்களை தொழிற்சங்க ஆதரவு நிலைப்பாட்டை தவிர மற்றதை கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் மார்க்சும், எங்கல்சும் போராடினார்கள்.
"வர்க்கங்கள் ஒழிய வேண்டும்" என்கிறார் மார்க்ஸ்.
பாக்குனினோ, "வர்க்கங்களுக்குள் சமத்துவம் கோருகிறார்."
தொழிலாளர்கள் என்ன கோரவேண்டும் என்று பாக்குனின் கூறுகிறார்:
*அரசியல், பொருளாதார, சமூக சமத்துவம் மற்றும் பூமியின் மீதுள்ள சகல வர்க்கங்களுக்கும், சகல மனிதர்களுக்கும் இடையே சமத்துவம்.
*தாய் சொத்து ஒழிய வேண்டும்.
*நிலங்களை விவசாய சங்கங்களின் உபயோகத்திற்கு மாற்றிக் கொடுப்பது
*மூலதனத்தையும், உற்பத்தி சாதனங்களையும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் ஸ்தாபனங்களுக்கு மாற்றிக் கொடுப்பது.... [பின்னாலில் மார்க்ஸின் பலத்த எதிர்ப்பினால் பாக்குனின் வர்க்க சமத்துவ கோரிக்கையை நிராகரித்து விட்டார்]
தொழில்கள், தொழிலாளர் ஸ்தாபனங்களுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பிற்காலத்தில் ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலிய அனார்க்கிஸ்டு மற்றும் ஸிண்டிகலிஸ்டுகளின் கொள்கைகளுக்கு அடிப்படையாக காரணமானது.
தொழிலாளர்களை பாமரர்களாக கருதிய பாக்குனின் அவர்களை ஓர் தலைமை வழிநடத்த வேண்டும் என்று கருதினார். மற்றும் தொழிலாளர்களே கலகம் செய்ய வேண்டும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
மார்க்ஸ் மக்கள் மீதும் வர்க்க ஸ்தாபனங்கள் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார். அதனால்தான் தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தினார். தொழிலாளர்களுக்கிடையே பிரசாரங்கள் செய்தார்.
மார்க்ஸின் அணுகுமுறையைக் கண்டு பாக்குனின், "மார்க்ஸ் வீண்வேலை செய்கிறார்" என்று கிண்டலடித்தார்.
"தொழிலாளர்களுக்கிடையே மார்க்ஸ் பிரசாரம் செய்யவில்லை, தொழிலாளர்களுக்கு ´வாதப் பிரதிவாதம்´ சொல்லிக் கொடுத்து கெடுக்கிறார்" என்று குற்றம் சுமத்தினார்.
பாக்குனின் பெரிய குறை தொழிலாளர்களை வேறுபடுத்தி பார்க்க வைத்தது. தொழிலாளிகள், ஏழை மக்கள், வறுமையால் தாக்கப்பட்ட பகுதி மக்கள், சாதாரண உழைப்பாளி போன்ற சொற்களை உபயோகித்தார். முற்போக்கான தொழில்களில் இருந்த தொழிலாளர்களை ´மேல்ஜாதி´யினர் என்று உதாசீனப்படுத்தினார்.
மார்க்சும், எங்கல்சும் விட்டுக் கொடுப்பதாயில்லை. தத்துவப் போராட்டங்கள் தொடர்ந்துக் கொண்டே இருந்தன.
கற்சுவரில் முட்டிக் கொண்டே இருந்தால் என்னவாகும் தறுதலைகளின் தலை?
மார்க்ஸியத்தில் முட்டி மோதி மீண்டவர்கள் எத்தனை பேர்?
தமிழச்சி 01.03.2010
தொடர்புடைய இணைப்புகள்:
* அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம்![1] http://ow.ly/1cVHU * poverty of philosophy[2] http://goo.gl/qW1J * Mikhail Bakunin[3] http://ow.ly/1cYme * பாக்குனினிஸம்[4] http://ow.ly/1cWCe
|
 |