 |
சைத்தான்களுக்கு உத்தரவு கிடைத்தது "நாதியற்றவர்களை ஒழித்துக் கட்டுங்கள்" என்று! தலைமை ஆணையே தலையாயக் கடமை கொக்கரித்தபடி சைத்தான்கள் நவீன நாகரிக மனிதர்களாயின!
தலைக் கவசத்திற்குள் கொலைவெறியை மறைத்தபடி, இராணுவ உடையில்; புதிய அவதாரத்தின் சந்தோஷத்தில் கனத்த செருப்புக்குள் புதைத்த பாதத்தில் மண்தெறிக்க நடக்க... இராமனும், புத்தனும், யேசுவும், அல்லாவும் ஓட்டமெடுக்கிறார்கள்!
இந்த நாதியற்ற கூட்டத்தில்; யேசுவே பெரும்பான்மை மக்கள் உன்னையும், என்னையும் நம்பவில்லை! பொறுப்பை இராமன் பார்த்துக் கொள்ளட்டும்!
ஐயோ! சைத்தான்கள் புத்தனுக்கு கட்டுப்படலாம்; நானிருந்தால் வம்பாகிவிடும்! தப்பிக்க என்ன அவதாரம் எடுப்பது ஓடியபடி சிந்திக்கிறான் இராமன்!
ஆகா! கடவுளர்களே ஓட்டமெடுக்கிறார்களா? அப்படியானால் இவர்களே உலகில் நாதியற்ற மனிதர்கள்!
"கண்ணில் படும் தமிழன்களை எல்லாம் நிர்வாணமாக இழுத்து வாருங்கள்!" வேக வேகமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. கைகளைக் கட்டியும், கண்களை மறைத்துக் கொண்டும் நிர்வாணப்படுத்தப்பட்ட தமிழர்களின் தலைகளுக்குள் வெறித்தனமாக தோட்டாக்கள் பாய்கிறது!
பூலோகப் பாடப்பிரிவில் வரலாறு பதிவு செய்கிறது; கடைசியாக சைத்தான்கள் சிங்கள இராணுவ வீரர்களாக அவதரித்து தமிழினத்தை கொன்றொழித்தனர். சைத்தானின் தலைவன் ராஜபட்சேவுக்கு உலகின் சிறந்த கொடுங்கோலன் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
தமிழச்சி 31.03.2009
|
 |