 |
மகிழ்ச்சியூட்டிய பல நொடிகளை நாம் உணர்ந்திருந்திருக்கிறோம். ஏன் அது வாழ்நாள் முழுவதும் தொடருவதில்லை?
மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று வாழ்க்கையோடு போராடுகிறோம். அதற்காகவே முயல்கிறோம். இருந்த போதிலும் எப்போதும் துயமுமாகவே இருக்கிறதே ஏன்? துயரம் இல்லாமல் மகிழ்ச்சியோடு மட்டுமே இருக்க முடியுமா?
இதற்கு சரியான தத்துவார்த்த பதில் ஜே.கே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனையில் இருந்து விடை தேடுவோம்..
ஜே.கே நம்மிடமே கேள்வியை ஆரம்பிக்கிறார்..!
"மகிழ்ச்சி என்றால் என்ன?..."
"நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது அக்கணமே உமக்குத் தெரிகிறதா? அல்லது அது கழிந்த நில நொடிகளுக்குப் பின்னேரேயா?..."
"மகிழ்ச்சி என்பது இன்பமா?..."
"இன்பம் என்பது தொடர்ந்து இருக்கக் கூடிய ஒன்றா?..."
என் (ஜே.கே) வரையில் இன்பம் நான் அறிந்த மகிழ்ச்சியுடைய ஒரு பகுதியே. இன்பமில்லாது மகிழ்ச்சியை என்னால் எண்ண முடியவில்லை. மனிதனின் முதல் உணர்ச்சியே இன்பம் தான். அதை அகற்றிவிட்டால் எப்படி மகிழ்ச்சி இருக்கக்கூடும்?
நாம் மகிழ்ச்சி என்ற கேள்வியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
நீங்கள் முன்கூட்டியே ஒரு தீர்மானத்துக்கு வந்தாலும், அதைப்பற்றி ஊகித்தாலும், நீர் இதில் ஆழமாகப் புக முடியாது. பல கோணங்களையுடைய மனிதனுடைய சிக்கல்களைப் பற்றி ஆராய வேண்டுமானால் முதல் முதலிலிருந்தே விடுதலை தேவை. உன்னிடம் விடுதலை இல்லாவிட்டால் எப்படி சாத்தியமாகும்?
"கொள்கைகள், சூத்திரங்கள், நம்பிக்கைகள், அல்லது அனுபவங்கள் இவைகள் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன. இவற்றிலிருந்து நாம் ஆராயவும், சுற்றிப் பார்க்கவும் முற்படுகிறோம். இதுவே நாம் இயல்பாக ஆழ்ந்து ஆராய்வதைத் தடை செய்கிறது."
நான் (ஜே.கே) கூறவிரும்புவது இன்பம்தான் மகிழ்ச்சி என்றால் அதுவே துன்பமாம். நம்பிக்கையொன்றும் கொள்ளாதீர். எதையும் முன்கூட்டியே ஊகிக்காதீர். என்றும் தெளிவான கண்களால் பாருங்கள். இன்பத்தையும், துன்பத்தையும் பிரிக்க முடியாது. இவை இரண்டனுடைய இயக்கமும் ஒன்றேதான்.
இன்பத்தைத் நம்முள் தூண்டி வளர்ப்பது எது? எண்ணம்தானே..!
மகிழ்ச்சிக்கு ஒரு தொடர்ச்சியையும், நாம் மகிழ்ச்சியென்று அழைக்கும் நீடித்த இருப்பு என்ற தோற்றத்தை தருகிறது. அதேப்போன்று எண்ணம் துன்பத்திற்கும் நீடித்த இருப்பைத் தரக்கூடும்.
எண்ணம் என்பது...
"இது எனக்கு விருப்பம்..."
"அது விருப்பமற்றது" என்றும்,
"இதை வைத்துக் கொள்வேன், அதை வெளியே எறிந்து விடுவேன் என்றும் கூறுகிறது."
இந்த சிந்தனைகளை ஏற்படுத்தியது எண்ணம்.
மகிழ்ச்சி இப்போது எண்ணத்தின் வழியாக தீர்மானிக்கப்படுகிறது.
நாம் இன்ப நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணம் கூறும்பொழுது முன்விளைந்த அனுபவத்தின் நினைவாக நாம் இன்பநிலையில் இருப்பதாக தீர்மாணிக்கிறோம் (எண்ணம் தீர்மாணிக்கிறது) இதே நாம் இன்பம், மகிழ்ச்சி என்கிறோம்.
ஆகவே, இறந்த காலம் நேற்று அன்றிப் பல நேற்றைகள் என்பதே.
எண்ணம் அது கூறுவது:
"நான் முன்பு துய்த்த மகிழ்ச்சியின் நிலையிலேயே வாழ நினைக்கிறேன். சென்று இறந்த ஒன்றை நிகழ்காலத்தில் உண்மையெனச் செய்து அவ்வாறான ஒன்றை நாளை இழந்துவிடுவேன்..." என்றும் பயம் கொள்கிறோம்.
இப்படி ஓர் தொடர் சங்கிலியை நாமே உருவாக்கியிருக்கிறோம்.
இதன் தொடர்ச்சி இறந்த காலம் என்ற சாம்பலில் வேறுன்றியது. ஆகவே, இது வாழும் பொருளன்று. சாம்பலில் ஒன்றும் மலராது. எண்ணம் என்பதே சாம்பல். ஆக நாம் மகிழ்ச்சியை எண்ணத்தின் ஒரு பொருளாகச் செய்திருக்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரையில் ´இருப்பது´ என்பது எண்ணம் விளைத்த ஒரு பொருளாகும்.
இன்பம், துன்பம், மகிழ்ச்சி, துயரம் இவற்றைத் தவிர ஏதாவது பொருள் ஒன்று இருக்கிறதா? எண்ணத்தின் தீண்டுதலற்ற நல்லருள் என்பதும், பேரின்பம் என்பதும் உள்ளனவா?
எண்ணம் என்பது புதுமையானது. அது தன்னாற்றல் கொண்டதும் இல்லை.
இந்தக் கேள்வியைக் கேட்கும் பொழுது எண்ணம் தன்னை இழக்கையில் அங்குக் கைவிடப்பட்ட நிலையின் ஒழுங்கு இருக்கிறது. அதுவே எளிமையின் அருள். அவ்வாறான எளிமை விலங்குத் தன்மையும், இரக்கமில்லாத் தன்னமையும் அற்றது.
ஆனால், வலுக்கட்டாயமாக ஏற்கும் கடும் எளிமை இன்பத்தையும் சலுகை கொண்டு வாழ்வதையும் கண்டு எண்ணம் அருவருப்படைந்ததால் விளையும் ஒன்று.
இந்தத் தன்னிழத்தலிலிருந்து அதாவது எண்ணம் தன்னைத்தானே கைவிடுவதால் அது தனக்கேற்படும் அபாயத்தைத் தெளிவுடன் நோக்குகிறது. மனத்தின் கட்டிடங்களனைத்தும் அமைதியடைகின்றன. உண்மையில் இந்நிலை அப்படடமான கவனமாகும். இதிலிருந்து வருவது சொற்களின் கட்டுக்கடங்காத நல்லருள் பேரின்பம் இவை.
சொற்களைக் கொண்டு இவ்வனுபவத்தை சொல்ல முற்பட்டால் அது உண்மையாகாது.
தமிழச்சி 03.09.2009
|
 |