Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


FEB
27
2010

மோட்சமும், நரகமும்...

முதலில் மனிதனை மோட்சத்தை – சுவர்க்கத்தை மறக்கச் சொல்ல வேண்டும். மோட்சமும், சுவர்க்கமும் இன்றைய கள்ளு – சாராயக் கடைகளை விட, தாசி – வேசிகள் வீடுகளை விட மோசமானது என்பதை மக்கள் உணரும்படிச் செய்ய வேண்டும்.

மோட்ச நரகம் என்பது, எப்படி திருடர்கள் பிராயாணிகள் வழிப்பறி செய்வதற்குத் தனி வழியில் ஆள் அடையாளம் தெரியாமல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து வழி மறித்து, மண்டையை உடைக்கத் தடிக் கம்பையும், ஈட்டியையும் ஆயுதமாகக் கொண்டு பொருள் பறித்துச் செல்லுகின்றார்களோ அதுபோலவே, பகல் வழிப்பறிக்காரர்கள் மக்களின் வாழ்க்கைப் பிராயணத்தில் வழி மறித்துப் பொருள் பறித்துப் போக, செய்து கொண்ட ஆயுதங்களேயாகும்.

ஆகையால், அதை மனிதன் முதலில் மறந்தாக வேண்டும்.

இந்த உலக வாழ்க்கையையும், ஒழுக்கத்தையும், மக்களுக்கு உதவி செய்வதையும், தனது அளவுக்கும் தேவைக்கும் மேல்பட்டதை அடைய ஆசைப்படாமலிருக்க வேண்டியதையே மோட்சம் என்று இலட்சியம் கொள்ள வேண்டும். இந்தப்படி அளவுக்கும் தேவைக்கும் மேல் மக்களை அடையச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுவதையே மக்களை மோட்சத்திற்கு அனுப்பும் வேலையென்று நாம் கருதவேண்டும்.

மனிதன் இந்த நாட்டில் எப்படித் தனது தேவைக்கும், அளவுக்கும், தகுதிக்கும் மேல் அடைய ஆசைப்படுகின்றானோ அதற்கு ஆதரவாய் இருப்பதற்காகவே மூடர்களுக்கு மேல் உலகத்தில் - அவரது தகுதிக்கும், அளவுக்கும், தேவைக்கும் மேலாக அனுபவிக்க ஆசை காட்டி இங்குத் தட்டிப் பிடுங்கிக் கொள்ளுகிறார்கள்.

மூடர்களும், பேராசைக்காரர்களும் தான் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்திற்கும், சுவர்க்கத்திற்கும், பாமர மக்களுக்குச் சொல்லப்படும் கருத்துக்களைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள்.

மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக்கூடுமோ அதையே தான் மோட்சத்தில் சிருஷ்டித்து இருக்கிறார்கள்.

அதாவது, இங்குள்ள மனிதனுக்குப் பொருள் வேண்டும். பெண் வேண்டும். தேவையானதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் வேண்டும். நல்ல வாலிபப் பருவம் வேண்டும். சதா இடைவிடாமல், போக போக்கியம் வேண்டும், சாகாமல் இருக்க வேண்டும் ஆகிய இந்த விஷயங்கள் மனிதனுக்குச் சாகும் வரையிலும், செத்த பிறகும் அனுபவிக்கக் கூடியதாய் ஆசைப்படக் கூடியது என்பது யாரும் அறிந்ததாகும்.

ஆகவே, இந்த காரியங்களையே மேல் உலகத்தில் இருப்பதாகவும், அதை அடையக்கூடும் என்றும் ஆசை உண்டாகும்படி அதாவது மேல் உலகத்தில் எங்குப் பார்த்தாலும் பொன்னும், ரத்தினங்களும் இறைந்து கிடக்குமென்றும், உலகமே பொன்னுலகமென்றும், அங்கு அரம்பை – ஊர்வசி முதலாகிய தேவ கன்னிகைகள் என்பவர் என்றைக்கும் வாலிபமாய் நம் பக்கத்தில் இருந்து கொண்டு நமக்குச் சதா போகம் கொடுத்துக் கொண்டிருப்பார்களென்றும் காமதேனு - கற்ப விருட்சங்கள் நமக்கு எது தேவையோ அதை உடனே கொண்டு வந்து கொடுக்குமென்றும், நரை, திரை மூப்பில்லையென்றும் நாம் சாகாமல் சிரஞ்சீவியாய் இருப்போமென்றும் சொல்லி ஏற்பாடு செய்து விட்டதால், அவற்றை மனிதன் நித்தியமாய் நம்பி இந்த உலகத்தையும், இங்குள்ள போக போக்கியங்களையும் அநித்தியமாய் எண்ணி, கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்களையெல்லாம் இந்த மோட்சத்திற்கு என்றே செலவு செய்வதுடன் நில்லாது, இதற்காக என்று பலவிதமான அக்கிரமமான வழிகளிலும், மற்ற மக்களை வஞ்சித்தும், பட்டினி போட்டும், பொருள் பறித்தும் கூட இதற்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது.

உதாரணமாக ஏழை மக்கள் கஞ்சிக்கு அலையும் போது குடம் குடமாய்ப் பால் குடங்களைத் தினமும் கல்லின் தலையில் கொட்டி அவற்றை நாற வைப்பதன் கருத்து என்ன என்று பாருங்கள். குடியிருக்க நிழல் இல்லாமல் மக்கள் திரியும் போது, மகைளையும், பாறைகளையும் உடைத்துக் கோட்டைகள் போல் மக்கள் கோவில்கள் கட்டுவதன் கருத்து என்னவென்று பாருங்கள்.

எவ்விதத் தொழிலும் செய்வதற்கு மூலதனம் இல்லாமலும், தொழிலில்லாமலும், மக்கள் வயிறு வளர்க்கக் கப்பலேறி வேறு நாட்டிற்குக் கூலிகளாய்ப் போய் செத்துப் பொத்தென்று மாண்டு மடிந்து கொண்டிருக்கும் போது, பொம்மைகளை வைத்து உற்சவம் செய்வதும், அவற்றிற்குப் பத்து இலட்சம், ஒரு கோடி, பத்துக் கோடிக்கணக்கான நகைகளும், பாத்திரங்களும், வாகனங்களும், துணிகளும் சேர்த்து வைப்பதன் கருத்து என்ன என்று பாருங்கள்.

நாளுக்கு நாள் வாழ்வு கஷ்டத்திற்கு வந்து ஏழைகள் மலிந்து வரும்போது, இலட்சம், அம்பதாயிரம், மூன்று இலட்சம் ரூபாய்கள் செலவு செய்து கும்பாபிஷேகங்கள் செய்வதன் கருத்து என்னவென்று யோசித்துப் பாருங்கள். பூமியை உழுது, கஷ்டப்பட்டுப் பயிர் செய்யும் குடியானவர்கள், அரை வயிற்றுக்குக் கூடப் போதும் படியான ஆகாரமில்லாமல் கஷ்டப்படும் போது, குழவிக்கல்லுக்கும், செம்பு, பித்தளை, பொம்மைகளுக்கும் தினம் பத்து மூட்டை, இருபது மூட்டை, முப்பது மூட்டை போன்ற அரிசிகள் போட்டுப் பொங்கி நைவேத்தியம் செய்து பாடுபடாத சோம்பேறிகளுக்கு, குடும்பத்துடன் போட்டுக் கொண்டிருக்கும் கருத்து என்ன என்று எண்ணிப்பாருங்கள்.

மக்களில் நூற்றுக்கு 10-பேர்களுக்குக் கூட அதாவது சராசரி படிப்பு, எழுத்து வாசனை கூட இல்லாமல் இருக்கும் போது, வேத பாடசாலை, தேவாரப் பாடசாலை முதலியவையும், கல்லுகள், பொம்மைகள் பின்னால் நின்று கொண்டு ஆயிரத்திற்கு ஒருவருக்குக் கூடப் புரியாத வேதபாராயணம் முதலியவை செய்யப்படுவதற்கும், இலட்சக்கணக்காய்ச் செலவு செய்யப்படுவதன் நோக்கம் என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.

இப்படியாக நமது நாட்டில் இதுபோலவே எவ்வளவு காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை நோக்கினால், மற்ற மக்களை எவ்வளவு பாடுபடுத்தியாவது, அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலாவது சிறிதும் லட்யமில்லாமல் நாம் மோட்சத்திற்குப் போக வேண்டும். நாம் பிரபுவாய் இருக்க வேண்டும். லட்சுமி புத்திரராய் - ராஜாவாய் - நிரந்தர செல்வவானாய் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்கிற பேராசையல்லாமல் வேறு தத்துவம் அதில் என்ன இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்த மாதிரி மோட்சம் கற்பிக்கப்பட்டு அதை அடைவதே மனிதனின் முக்கிய லட்சியம் என்று போதிக்கப்பட்டிருக்கின்ற பேராசை ஜனங்கள் மலிந்திருக்கும் இந்த உணர்ச்சியை அழிக்காமல் என்ன காரியம் நம்மால் செய்ய முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆதலால் தான் முதலில் மோட்ச உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன்.

சகோதரர்களே! இந்த மோட்ச உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியதைப் போலவே நரக உணர்ச்சியும் அழிக்கப்பட வேண்டும். மோட்ச உணர்ச்சி எப்படிப் பேராசையின் பிரதிபிம்பமோ, அதுபோலவே நரக உணர்ச்சியும் அடிமைத்தனத்தினுடையவும், பயங்காளித்தனத்தினுடையவும் பிரதிபிம்பமாகும். நரகத்திற்குப் பயப்படுவதாலேயே அநீதிகளுக்கு மனிதன் ஆளாகின்றான். தைரியமில்லாத கோழையாயிருக்கின்றான்.

இவற்றையெல்லாம் விட மனிதன் சிறிதாவது முற்போக்கடைய வேண்டுமானால் சிறிதாவது இயற்கையின் இன்பத்தை நுகர வேண்டுமானால் எல்லாவற்றையும் விட மனிதனுக்கு விதி – கர்ம பலன் என்கின்றதான உணர்ச்சிகள் கண்டிப்பாய் ஒழிய வேண்டும்.

விதியும், கர்மபலனும் என்கின்றவையான உணர்ச்சி இந்திய நாட்டிற்கு ஏற்பட்டிருக்கவில்லையானால், இன்றையத் தினம் இந்தியா அநேக விஷயங்களில் ரஷ்யர்களுக்கு ஏன் இந்த உலகத்தில் உள்ள மற்ற எந்த நாட்டு மக்களின் நிலைமைக்கும் மேலாக இருந்து அநேகமாக உலக மக்களுக்கே சமத்துவத்தையும், சம இன்பத்தையும், இயற்கை இன்ப நுகர்ச்சியையும் கொடுத்துச் சர்வ சுதந்திரத்துடன் வாழச் செய்திருக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுவேன். ஆகையால், இந்தக் கர்ம பலன் உணர்ச்சி மனிதத் தன்மைக்கு மிகவும் கேடான எதிரி என்பதை நீங்கள் நன்றாய் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.

நான் மேலே காட்டிய இந்தக் காரணங்கள் தான் இந்த உலகத்தில் நமது நாட்டை மாத்திரம் இந்த இழிவான நிலையிலும் மீளா அடிமைத்தனத்திலும் வைத்திருக்கின்றன. இவை ஒழிந்தால் தானாகவே இந்தியா சுயமரியாதை பெற்று விடும்! சுதந்திரம் பெற்றுவிடும்! மனிதத் தன்மை அடைந்து விடும்! ஆகையால், சகோதரர்களே! நீங்கள் இந்திய நாட்டின் முற்போக்குக்கும், விடுதலைக்கும் மனிதத்தன்மைக்கும் பாடுபட வேண்டுமானால், மேற்கண்ட காரியங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.

இதற்கு மாறுபாடான அபிப்பிராயமுள்ளவர்கள் சிலர் - ஏன் பலர் இருக்கலாம். இன்றைய உலகம் பெரிதும் அப்படிப்பட்டவர்களையே அதிகமாகக் கொண்டிருக்கின்றது. ஆதலால், இந்த எனது அபிப்பிராயம் அவர்களுக்கு மிகக் கஷ்டமானதாகத் தோன்றலாம். அவர்களால் நமக்குப் பலவிதக் கஷ்டங்களும், தொல்லைகளும், தடைகளும், ஆபத்துகளும் ஏற்பட்டாலும் ஏற்படலாம். நாம் அவற்றைத் தாராளமாய் எதிர்பார்த்து அவற்றைப் பற்றி ஆச்சரியப்படாமல் - பயப்படாமல், சமாளித்து நிற்க முனைந்து கொண்டு தான் இந்தத் தொண்டு செய்ய வேண்டும். சுயமரியாதை இயக்கத் தொண்டு என்பது மற்றத் தொண்டகளைப் போல், அதாவது ஏதாவது, புராணங்களைப் படித்து விட்டுப் பக்திரசக் கீர்த்தனையைப் பாடிவிட்டு அல்லது மேடைகளில் நின்று இந்த இராஷச அரசாங்கத்தை அழிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு மக்களிடத்தில் இருந்து பண்டிதன் என்றோ, பக்திவான் என்றோ, தேசிய வீரன் என்றோ சுலபத்தில் பெருமை பெற்றுவிடக் கூடிய காரியமல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

போகிற இடத்தில் எல்லாம் கல்லடி படவும், வசவு கேட்கவும், கலகக்காரர்களாலும், நம் எதிரிகளின் கூலிகளாலும் தொல்லைப்படத் தயாராயிருக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே, இவ்வளவு நேரம் எனக்குச் சரி என்று பட்டதை – நான் மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்று நினைத்ததை, எனது நாடு என்று சொல்லப்படுவது மற்ற நாடுகள் எதற்கும் இளைத்ததல்ல என்னும்படியான நிலைமைக்குக் கொண்டு வரவேண்டியதற்கு ஏற்ற சாதனம் என்று கருதியதை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். உங்கள் அபிப்பிராயங்களையும், என்னிலும், உங்களிலும், மாறுபட்டவர்களுடையவர்களது அபிப்பிராயங்களையும், பொறுமையாய்க் கேட்டு எல்லாவற்றையும் நடு நிலையில் இருந்து யோசித்து உங்கள் புத்திக்கு எட்டிய முடிவுப்படி நடக்க முயலுங்கள். குற்றமிருப்பினும் அனுபவத்தில் சீக்கிரம் திருத்தமாகிவிடும்.

 
- தோழர் பெரியார். [07.09.1930-தேதி அன்று கேரளா சீர்திருத்த மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு]


 

 

 13 

 

 14 

 

 15 

 

 16 

 

 17 

 

 18 

 

 19