Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


MAR
04
2010

எண்ணங்களின் வலிமை!

இங்கிலாந்தைச் சேர்ந்த தத்துவஞானி ´ஜேம்ஸ் ஆலன்´ மனிதனின் எண்ணங்களைக் குறித்தும், வாழ்வியல் சிந்தனைகளைக் குறித்தும் அதிகம் சிந்தித்தவர். அவரின் தத்துவங்கள் மிக எளிமையாக, உண்மையனவாக காணப்படுகின்றன.

மனிதனின் மனம் குறித்தும், சிந்தனைகள் குறித்தும் அவரிடம் கேள்வி எழுந்த போது சொல்கிறார்:

"சூழ்நிலை - மனிதனை உருவாக்குவதில்லை. அடிப்படையில் இன்ன மனிதன் தான் உள்ளே இருக்கிறான் என்பதை அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது."

இக்கருத்தை அடிப்படையாக வைத்து மேலும் விவரிக்கிறார் ´ஜேம்ஸ் ஆலன்´

"மனித மனம் ஒரு தோட்டம் போன்றது. தோட்டம் போல அதைக் கருத்துடன் பண்படுத்தி பயிரிடலாம் அல்லது கண்டது விளையட்டும் என்றெண்ணி அதன் போக்கில் விட்டு விடலாம். திட்டமிட்டு வளர்த்தாலும் சரி அல்லது காட்டுப் போக்கில் விட்டாலும் சரி, என்ன விதை அங்கே விழுந்ததோ அதற்கேற்ற பயிர்களை அது உண்டு பண்ணுகிறது. நல்ல பலன்தரும் விதைகளை விதைக்காத போது உபயோகமற்ற புல்லும், புதரும் தான் அங்கே முளைக்கும், பரவும்.

எப்படி புல்லும், புதரும் முளைக்காமல் - பரவாமல் ஒரு தோட்டக்காரன் தன் தோட்டத்தைக் கவனிக்கிறானோ எப்படி நல்ல காய் கனிகளையும், பூக்களையும் பயிரிட்டு வளர்த்து பயன் பெறுகிறானோ அதே போல் ஒரு மனிதன் தன் மனம் என்ற தோட்டத்தில் கறம்பும், காளானும் வளராவண்ணம் கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும். நியாமில்லாத சிந்தனைகள், பயனற்ற எண்ணங்களையெல்லாம் களை எடுத்து எறிய வேண்டும்.

தோட்டத்தில் பயிரிட்டு வளர்ப்பது போல மனத்தில் சரியான எண்ணங்களைப் பயிரிட்டு கண்காணித்து வரவேண்டும். அப்படிப்பட்ட மனிதன் ஆத்மாவின் தலைவனாக தன்னை உணர்கிறான். தன் வாழ்வுத் தோட்டத்தின் நிர்வாகி என்பதை உணர்கிறான். எந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எண்ணங்கள் இயங்குகின்றன என்பதைப் பற்றிய தெளிவு அவனுக்கு ஏற்படுகிறது. எண்ணங்களின் சக்தியும், மனஇயல்புகளும் எப்படி அவனது குணங்களை உருவாக்குகிறது, அவனது சூழ்நிலையை நிர்ணயிக்கிறது அவனது விதியைத் தீர்மானிக்கிறது என்கிற வரைமுறைகளையும், நுட்பங்களையும் புரிந்து கொள்கிறான்.

எண்ணமும், குணங்களும் ஒன்றே தான். ஒன்றிலிருந்து தான் மற்றது வருகிறது. எண்ணங்கள் தான் குணங்களாக நாளடைவில் மாற்றம் பெறுகின்றன. ஒரு மனிதனது குணங்கள் அவனது சூழ்நிலை மூலமும் அவனுக்கேற்படும் வாய்ப்புகள் மூலமும் தங்களைக் காட்டிக் கொள்கின்றன. அதே போல அவனுக்கு வெளி உலகில் நேரும் வாழ்க்கைச் சம்பவங்களும், அவனது உள் மனநிலையும் ஒரு நேரடித் தொடர்பில் - ஒரு லயம் நிறைந்த உறவில் - இயங்குகின்றன.

ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு மனிதனுக்கேற்படும் சம்பவங்களை வைத்து அவனது கஷ்டங்களைக் கண்டு அது அவனது மொத்த குணங்களின் விளைவாக ஏற்பட்டது என்று நாம் கூற முடியாது. இருந்தாலும் அவனது எண்ணங்களுக்கும் அவனது சூழ்நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது அந்த வாழ்க்கைச் சம்பவங்கள் அவனது வளர்ச்சிகளுக்கு தற்காலிகமாகத் தேவைப்படுகின்றன.

ஒரு இடத்தில் ஒரு மனிதன் ஒரு காரணத்திற்காக வைக்கப் பட்டிருக்கின்றான். அதில் ஒரு சட்டம் நியாயம் இயங்குகிறது. அவனது குணங்களை உருவாக்கிய எண்ணங்கள் அவனை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கின. வாழ்வு என்பது ஒரு திட்டவட்டமான அமைப்பு. அதில் எதுவும் எதிர்பாராது காரணமில்லாது நிகழ்ந்து விடுவதில்லை. எல்லாம் ஒரு சட்டத்திற்குட்பட்டு இயங்குகிறது. ஒரு நாளும் இந்த நியதி மாறுவதில்லை."


தமிழச்சி
22/01/2000




 

 12 

 

 13 

 

 14 

 

 15 

 

 16 

 

 17 

 

 18