Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


JUL
28
2010

வாசிப்பு!

நல்ல மழை பெய்துக் கொண்டிருக்கிறது. வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை. நீங்கள் வசிப்பது ஓர் சிறிய ஊரில். நெடுநேரமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க எரிச்சலாக இருக்கிறது. உங்களுக்கு நேரம் போக வேண்டுமே!

கையில் கிடைத்த நூலை எடுக்கிறீர்கள்.

அரசாங்க ஏட்டை அல்லது தலைநகரின் அறிவிப்பைப் படிப்பது போல அதைப் படிக்கத் தொடங்குகிறீர்கள். அதில் கவனம் செல்லவில்லை. வேறு சிந்தனை வருகிறது. கொட்டாவி விட்டுக் கொண்டே மேலோட்டமாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

திடீரென்று உங்கள் நிலையில் ஒரு மாற்றம்.

எதற்கோ கட்டுப்படுவது போல உணர்கிறீர்கள். உங்கள் எண்ணம் உங்களிடம் இல்லாதது போலத் தோன்றுகிறது. உங்கள் கவனக்குறைவு மறைகிறது. ஒருவகை ஈடுபாடு தெரிகிறது. அதற்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்கள். உங்கள் விருப்பப்படி எழுந்திருக்கவோ, போகவோ உங்களால் முடியவில்லை. எதுவோ உங்களை பிடித்து வைத்திருப்பது போல் உணர்வு.

எது அப்படி செய்தது?

அந்த நூல்தான்.

நூல் என்பது பல்சக்கரங்கள் போன்ற ஓர் இணைப்பு.

வெள்ளைத் தாளில் உள்ள அந்தக் கறுப்புக் கோடுகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவை பலம் பொருந்தியவை.

அவை தமக்குள் பொருந்தும்; ஒன்று சேரும்; வேறுபடும்; ஒன்றுக்குள் ஒன்று புகும்; இழைகள் போன்று இழைக்கப்படும்; முடிச்சுகள் போடும்; அவிழும்; இணையும் வேலை செய்யும். ஒருவரி கடிக்கும்; ஒருவரி இறுக்கும்; ஒருவரி அழுத்தும்; ஒருவரி இழுக்கும்; ஒருவரி வசப்படுத்தும்.

எண்ணங்கள் பல்சக்கரங்கள் போன்றவை.

அந்த நூலால் நீங்கள் கவரப்படுவதை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் அறிவுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்த பிறகு தான் அது உங்களை விடும். புரிந்து கொள்ளுதல் நெருங்குதல் ஆகும்.

ஒரு நல்ல நூலை திறத்தல் அதில் மகிழ்தல், அதில் ஆழ்தல், தன்னை மறத்தல், அதை நம்புதல் இவை எத்தகைய விருந்து!


* ´விக்தோர் வுய்கோ´ (Victor Hugo 1802-1885)



 1 

 

 2 

 

 3 

 

 4 

 

 5