 |
பரெல்லியின் மனைவி ´மரியா´ இறந்து விட்டாள். சிறிய வயதுதான். திடீரென உடல்நலமில்லாமல் போய்விட்டது. இன்னும் குழந்தை கூட இல்லாத இளம் தம்பதிகள் அவர்கள். இப்படியாகிப் போய்விட்டது.
கல்லறையில் சவப்பெட்டி கொண்டு வரப்படுகிறது. குழிக்குள் இறப்பதற்கு ஆயத்தம் செய்துக் கொண்டிருக்கின்றனர். பரெல்லியின் உறவினர்கள் நண்பர்கள் என கூட்டம். பரெல்லி அழுது கொண்டே இருக்கிறான்.
தன்னுடைய காதல் மனைவியின் மரணம் அவனை பித்தனாக்கி வைத்திருக்குமோ என்னமோ? அவனுக்குள் என்ன வலிகளோ? புதைகுழிக்குள் தன் மனைவி இருக்கும் சவப்பெட்டியை இறக்கி விட்டார்களே என்று கதறுகிறான். தானும் அதில் குதிக்க முயற்சிக்கிறான். நண்பர்கள் பிடித்துக் கொள்கிறார்கள்.
"கொடுமை, என்னால் பார்க்க முடியவில்லை; அவளை மண்ணுக்குள் புதைத்து விடாதீர்கள்...."
திமிறிக் கொண்டு வர முயலுகிறான் பரெல்லி.
சுற்றி இருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியான இக்காட்சியைக் கண்டு கண்கள் கலங்கி விட்டன. காரில் திரும்பி வீட்டுக்குச் செல்லும் வரையில் பரெல்லி பிதற்றிக் கொண்டே இருந்தான்.
"மரியா, இனி எப்படி வாழ்வேன்" கதறிக் கொண்டே இருந்தான்.
***
மரியாவின் சகோதரன் ஒரு வாரமாக பரெல்லிக்கு போன் செய்துக் கொண்டிருக்கிறான். எடுக்கப்படவே இல்லை. அவன் இருக்கும் ஊர் பரெல்லியின் இருப்பிடத்தைவிட ரொம்ப தூரம். என்னாயிற்றோ என்று தினமும் குழப்பம்.
மரியாவின் சகோதரன் நேரில் போய் பார்ப்போம் என்று கிளம்புகிறான். வழியெல்லாம் பரெல்லியின் சிந்தனை. பாவம் எப்படி தாங்குவான்? மரியாவை எப்படியெல்லாம் நேசித்திருப்பான். என்னாயிற்று ஏன் போன் எடுக்கவில்லை. ஒருவேளை தற்கொலை ஏதாவது...
ஓ! மை காட்! அப்படி எதுவும் இருக்கக் கூடாது. அவனிடம் பதற்றம் அதிகமாக இருந்தது. டீரைவிங் செய்ய முடியவில்லை. கைகள் நடுங்க ஆரம்பித்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. தனியாக விட்டிருக்கக் கூடாது பரெல்லியை.
´தப்பு செய்து விட்டோமோ!´ அவனுக்குள் குற்றவுணர்வு.
எல்லோரும் கேட்டார்களே; அவன் தான் மறுத்து விட்டான். தனியாக இருக்க விரும்புவதாக சொன்னானே. பாவி என்ன செய்தானோ!
***
பரெல்லியின் வீட்டுக்கு வந்து விட்டான். ஆலிங்பெல்லை அடித்தான். 10- நிமிடங்களாகியும் யாரையும் காணவில்லை. உண்மையில் பயந்து போய்விட்டான் மரியாவின் சகோதரன். வீட்டின் கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே ஓடினான். கீழே பரெல்லியைக் காணவில்லை. மாடிக்கு ஓடினான். கட்டில் அலங்கோலமாகக் கிடந்தது. கட்டிலைச் சுற்றிலும் விஸ்கி பாட்டில்கள் சிதறிக்கிடக்கிறது. நிறைய சிகரெட் துண்டுகள். அதில் கிடந்த பரெல்லியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
"இது ரொம்ப மோசம் பரெல்லி, அநியாயத்துக்கு மோசம்" அதிர்ச்சியில் பிதற்றினான் மரியாவின் சகோதரன்.
வேலைக்காரியை மும்முரமாக போட்டுக் கொண்டிருந்த பரெல்லி, "நானே எப்பேர்ப்பட்ட துக்கத்தில் (அப்படி இருக்கும் போது) இருக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்று எனக்கென்ன தெரியும். என்னுடைய துக்கமானது எப்பேர்ப்பட்டது" மீண்டும் அழத் தொடங்குகிறான் பரெல்லி.
***
எல்லா மனிதர்களும் பரெல்லியைப் போல் வெளித்தோற்றத்திற்கென்று சமூகத்திற்கு ஏற்றபடி சாமாளித்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது சமாளித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்நடிப்பு மிகத் தேவையாய் இருக்கின்றது.
மக்களே போலிகளாக இருக்கும் போது சமூகம் என்பது எப்படி கிடக்கும்?
உளவியலாளர்கள், உளசிகிச்சையாளர்கள் என எல்லோரும் மக்களை எல்லைக்குள் இருத்தி பார்க்கவே விரும்புகிறார்கள். இயல்பின்மையை இயல்பாக நாம் உணரும்படி கட்டுப்படுத்துகிறார்கள். எல்லாமே சரியாக நடந்துக் கொண்டிருக்கிறதா என்று தீவிர கண்காணிப்புகள். சகோதரனாக சகோதரியாக அடுத்த வீட்டுக்காரனாக....
அதனால் மனிதர்கள் ஆரம்பித்து விட்டார்கள் தந்திர வேலைகளை பரெல்லியைப் போல்....
தமிழச்சி 04/01/2009
|
 |