Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


நான்

'நான்´ -
'நான்´ யார்?
'நான்´ என்பது என்ன?
'நான்´ என்பதை எப்படி விளக்குவது உங்களுக்கு?
'நான்´ ஒரு மரணத்தில் காணாமல் போகும் சராசரி ஜீன்!
'நான்´ என்னும் ´நானை´ நோண்டிக் கொண்டிருக்கிறேன்.
'நான்´ தேடுதலுக்கிடையில்.... 
சுற்றம் சூழும் போது தேடுதலை தூக்கிப் போட்டுவிட்டு....
சராசரி வாழ்க்கைக்கு என்னுடைய ´நான்´ என்னும் சிந்தனை ஓடிவந்துவிடுகிறது.

'நான்´ யார்?
'நான்´ என்பது என்ன? - 'நான்´ இவைபோன்ற தேடுதலில் ஈடுபடும்
'நான்´ என்னும் சிந்தனை எப்படி இருக்கும்?
சமூகத்துடன் முரண்படும் சிந்தனை -
'நான்´ என்னும் எனக்குள் இருக்கும் முரண்பாடா?
'நான்' என்னும் எனக்குள் இருக்கும் ஆணவமா?
'நான்' என்னும் எனக்குள் இருக்கும் அகங்காராமா? 
'நான்´ என்னும் எனக்கும் சமூகத்திற்கும் என்ன தொடர்பு?
பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையை
'நான்´ எதிர் கொள்ளும்விதம் எந்த மையத்தைப் பொறுத்தது?
கேள்விகள் ஒராயிரக்கணக்கில் குவிந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் விடை தான் என்ன?
அந்த விடையை நோக்கி தான் 'நான்´ செல்கிறதா?
அல்லது வாழ்க்கை விடைக்கான அனுபவத்தை கொடுக்கிறதா?
சூழல்களும், சிந்தனைகளும் -'நான்´ என்னும் என்னை ஞானம் அடைய வைக்கின்றனவா?
அந்த ஞானம் என்பது என்ன?
'நான்´ என்னும்  தன்னை அறிதலும் ஞானத்தில் உள்ளதா?
ஆம்! எனில் இதுவரையில் உலகில் அநேக மனிதர்கள்
உலக வாழ்வில் தன்னிலை அறியாதவர்களாகவே வாழ்கிறார்களா?
மரணமும், வாழ்வின் இறுதி கட்டங்களும்,
அதனூடாக சிந்திக்கும் ஞானமும்
மனிதனைப் பக்குவப்படுத்திவிட்டதாக சொன்னாலும்
மீண்டும் அவன் வாழ்க்கைப் போராட்டத்தில்
வாய்க்கும், வயிற்றுக்கும் முன்பே இந்த ஞானம் ஒடுங்கிப் போவது ஏன்? ஞானமென்பதெல்லாம் கடைசியில் ஏட்டுச் சுரக்காய் தானா?
அல்லது ஞானமடைந்தவன் 'தாமரை இலை மீது இருக்கும் நீர்' போலே
பட்டும் படாமலும் இருந்து விடுகிறானா?
அது இயலாமை இல்லையா?
தம்மைச்சுற்றி நடக்கும் வன்முறைகளை
மனிதம் 'ஞானத்தின் கண்' கொண்டு பார்க்குமாயின்
அங்கே முரண்பாடுகள் இருக்காதா?

இப்படி பல கேள்விகளுடன்... 
நான்´ என்னுடைய 'நானை' - எப்படி உங்களுக்கு அறிமுகப்படுத்துவது?  

தோழமையுடன்
தமிழச்சி